தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சென்னைப் பல்கலைக் கழக மசோதாவை 2 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
2022-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் சென்னை பல்கலைக் கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நீக்க- நியமிக்க தமிழ்நாடு அரசு அதிகாரம் அளிக்க வகை செய்தது இந்த மசோதா. இதற்காக 10-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததால் இதனை சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டார் ஆளுநர் ரவி.
இதனையடுத்து 2-வது முறையாக மீண்டும் இதே மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அரசியல் சாசனத்தின் படி 2-வது முறையாக அனுப்பப்பட்ட இம்மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்; ஆனால் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக இம்மசோதாவை கிடப்பில் போட்டிருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தற்போது சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
