ஜனாதிபதி திரவுபதி முர்மு, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது?
- மேற்கு வங்க மாநிலத்தில் சந்தால் பழங்குடிகளின் ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
- இந்த நிகழ்வு முதலில் சிலிகுரி பிதான்நகரில் நடைபெற இருந்தது. ஆனால் மேற்கு வங்க மாநில அரசு அனுமதி மறுத்தது.
- இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்வின் நிகழ்ச்சி பக்தோரா விமான நிலையம் அருகே இடம் மாற்றப்பட்டது.
- ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பக்தோரா விமான நிலையம் அருகே மற்றும் பிதான்நகர் ஆகிய இரு இடங்களிலும் பழங்குடி மக்களிடையே பேசினார்.
- பிதான்நகரில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ”நானும் மேற்கு வங்கத்தின் மகள்தான்; மாநில முதல்வர் மமதா பானர்ஜி என் இளைய சகோதரி; இந்த இடத்தில் மாநாடு நடத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பக்தோரா விமான நிலையம் அருகே நிகழ்ச்சிகளை முறையாக ஒழுங்கு செய்யவில்லை. பாதுகாப்பு குளறுபடிகள் இருந்தன” என விமர்சித்தார்.
- முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாநிலத்தின் முதல்வரான மமதா பானர்ஜி வரவேற்க செல்லவில்லை; மாநில அமைச்சர்கள் தான் அவரை வரவேற்றனர். இது பெரும் சர்ச்சையானது.
- மமதா பானர்ஜி, நாட்டின் ஜனாதிபதியை அவமரியாதை செய்துவிட்டதாக பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீறிய மமதா
- ஜனாதிபதி திரவுபதி முர்முவின் விமர்சனத்துக்கு மமதா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
- பாஜகவின் ஊது குழலாக திரவுபதி முர்மு செயல்படுகிறார். மணிப்பூர் பழங்குடிகள் கொன்று குவிக்கப்பட்ட போது ஏன் மவுனமாக இருந்தார் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு? பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியினர் உரிமைகள் பறிப்பின் போது மவுனமாக இருந்தது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் மமதா பானர்ஜி.

