நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் மிக கடுமையான எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்ட விக்சித் பாரத் – ஜி ராம் ஜி எனப்படும் புதிய 100 நாள் வேலை திட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து புதிய 100 நாள் வேலை திட்ட மசோதா, சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் புதிய சட்டமானது, ”வளர்ச்சியடைந்த பாரதம் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்) (விக்சித் பாரத் – ஜி ராம் ஜி) மசோதா, 2025′ என்ற இந்த சட்டமானது,
திறன் குறைந்த உடல் உழைப்புப் பணிகளைச் செய்ய முன்வரும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும், ஒவ்வொரு நிதியாண்டிலும் நூற்று இருபத்தைந்து நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பிற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம், ‘ வளர்ச்சியடைந்த பாரதம் @2047’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க ஒரு கிராமப்புற மேம்பாட்டுக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம், எதிர்காலத்திற்குத் தயாரான, ஒருங்கிணைப்பால் உந்தப்படும், முழுமையான செயலாக்கத்தை நோக்கிய ஒரு கிராமப்புற மேம்பாட்டுக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமப்புற மேம்பாட்டின் வேகத்தை விரைவுபடுத்த உதவும், அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் மூலம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு இந்த மசோதா அதிகாரமளிக்கும்” என்கிறது மத்திய அரசு.
ஆனால் எதிர்க்கட்சிகளோ, மகாத்மா காந்தியடிகள் பெயரிலான இந்த திட்டத்தில் மகாத்மா காந்தியடிகள் பெயர் நீக்கப்பட்டுவிட்டது; அதேபோல இத்திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கும் குறைக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துவிட்டதால் இது சட்டமாக அமலுக்கு வந்துவிட்டது.
