எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளன.
ஈரான் – இஸ்ரேல் -அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் சர்வதேச அளவில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பிலிப்பைன்ஸ், சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில் க்யூ ஆர் கோடு முறையில் தான் பெட்ரோல் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்தியாவிலும் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியுள்ளது.
பிபிசிஎல் நிறுவனத்தின் ‘ஸ்பீட்’ , ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் ‘பவர்’ மற்றும் ஐஓசிஎல் நிறுவனத்தின் ‘எக்ஸ்பி95’ உள்ளிட்ட உயர் செயல்திறன் கொண்ட எரிபொருள் வகைகளின் விலை லிட்டருக்கு 2.09 ரூபாய் முதல் 2.35 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
பஞ்சாப் மாநில பெட்ரோல் பம்ப் சங்க தலைவர் அர்ஷ்விந்தர் மோங்கியோ விலை உயர்வு தொடர்பாக கூறுகையில், பிரீமியம் பெட்ரோல் தற்போது 105.16க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இனி 107.13 ஆக விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக எச்.பி.சி.எல் நிறுவனம் டீலர்களுக்கு அறிக்கை வாயிலாக தகவல் தெரிவித்துள்ளது.
சிறந்த எஞ்சின் செயல்பாடு மற்றும் கூடுதல் மைலேஜ் கிடைப்பதற்காக ‘பிரீமியம் பெட்ரோல்’ பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானோர் வாகனங்களில் இன்ஜினை பராமரிக்க இந்த வகை பெட்ரோலையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
