சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக சீனா, பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அண்மையில் உயர்த்தப்பட்டது.
இந்தச் சூழலில், இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.35 உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஹெச்.பி.சி.எல் (HPCL) நிறுவனம் டீலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இந்த விலை உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.
HPCL (Power), BPCL (Speed), IOCL 95 (XP95) ஆகிய பிரிமியம் பெட்ரோல் விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. எனினும், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் தற்போது இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் போர் நீடித்தால் சாதாரண பெட்ரோல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் சிரமத்திற்குள்ளாகியுள்ள பொதுமக்கள், பெட்ரோல் விலை உயர்வு குறித்த அறிவிப்பால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
