தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் நாளை (ஆகஸ்ட் 3) முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார சுற்றுப்பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார்.
அதே போல பாமக சார்பில் “உரிமை மீட்க… தலைமுறை காக்க” என்று அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வரிசையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை நாளை முதல் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“உள்ளம் தேடி… இல்லம் நாடி” என்ற பெயரில் பூத் முகவர்களையும், மக்களை தேடி மக்கள் தலைவர் என்ற பெயரில் பொதுமக்களையும் சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தனது முதற்கட்ட பிரசாரத்தை நாளை ஆகஸ்ட் 3ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதி ஆரம்பாக்கத்தில் தொடங்குகிறார். தொடர்ந்து, அடுத்த மாதம் 23ம் தேதி மாலை செங்கல்பட்டில் மக்கள் சந்திப்புடன் தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் பிரேமலதாவுடன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய் பிரபாகரும் பங்கேற்க உள்ளதாக தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.