தமிழக அரசை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுரை எல்ஐசி பெண் மேலாளர் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டி உள்ளார்

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் களைகட்டியுள்ளன. வரும் தேர்தலில் அதிமுக -பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவாகியுள்ள நிலையில், அன்புமணி தரப்பு பாமக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதனால், தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில்,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை தேமுதிகவிற்கு அழைப்பு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து சென்னையில் இன்று (ஜனவரி 21) செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்று கூட எங்களுக்கு தெரியாது. கூட்டணிக்கு வருமாறு யாரும் தற்போது வரை எங்களை அணுகவில்லை. என்றார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.

ADVERTISEMENT

மேலும் பேசிய பிரேமலதா, “மதுரை எல்ஐசி கிளையில் அலுவலராக இருந்த கல்யாணி என்ற அதிகாரியை ராமகிருஷ்ணன் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இது தீ விபத்து என நாடகமாடி உள்ளார் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். அதற்காக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

பெண்கள் எல்லாத்துறையிலும் கோலோய்ச்சும் காலகட்டத்தில் ஒரு மேலாளராக இருக்கும் பெண்ணுக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது. சட்டம் நிச்சயமாக கடுமையான தண்டனையை ராம கிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக நீதியரசர்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன். உச்சபட்சமாக ஆயுள் தண்டனை தர வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share