ரஜினிகாந்த் திரைதுறையில் 50 ஆண்டுகால பொன்விழாவை கொண்டாடும் வேளையில், அவருக்கு திரை உலகினர் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று (ஆகஸ்ட் 11) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் ஒருவர் 50 ஆண்டுகாலம் வாழ்வதே அசாத்திய சாதனையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் திரையுலகில் ஒருவர் 50 ஆண்டுகாலம் பயணித்து, அதில் சூப்பர் ஸ்டாராகாவும் வலம் வருகிறார் என்றால் அது சாதாரண காரியம் அல்ல.
உலகின் மிக அதிக வயதான உச்ச நட்சத்திர ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். 1975ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகம் ஆனவர் ரஜினிகாந்த். அதன்பின்னர் தற்போது வரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பாட்ஷா, படையப்பா, முத்து, அண்ணாமலை, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், ஜெயிலர் என எண்ணற்ற பிளாக் பஸ்டர் படங்களும் அடங்கும்.

தற்போது 74 வயதான போதும் அதே ஸ்டைல், நடிப்பு என இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக படங்களை கொடுப்பதில் முன்னோடியாக உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனையடுத்து டிக்கெட் முன்பதிவிலேயே உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது கூலி.
இந்த நிலையில் தான் ரஜினியின் திரையுலக பொன்விழாவை கொண்டாடும் வகையில், மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த்… அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும். கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடி இருப்பார்.
ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள்.
திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து, சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்” என பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.