ADVERTISEMENT

கரூரில் பக்கா பிளான் போட்டு மக்களை கொன்றுள்ளனர்… உள்ளூர் ரவுடிகள் தான் காரணம் : பிரேமலதா ஆவேசம்!

Published On:

| By christopher

premalatha pointout ex minister for karur stampede

”கரூரில் பக்கா பிளான் போட்டு, பக்கா ஸ்கெட்ச் போட்டு 41 உயிர்களை பறித்துள்ளனர். ரவுடிகளை இயக்கியது அங்குள்ள 10 ரூபாய் மந்திரி தான். யார் மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும்” என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

அந்தவகையில் நேற்று கிருஷ்ணகிரியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் மக்கள் உயிரிழந்தது ஏன்? பின்னணியில் உள்ளது யார்? தமிழக அரசு மற்றும் விஜய் மீதுள்ள தவறு என்ன என்பது குறித்து விரிவாக பேசினார்.

அவர் பேசுகையில், ”கரூரில் பாதுகாப்பு கொடுக்க தெரியாமல் 41 உயிர்களை பலி கொடுத்து இருக்கிறார்கள். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்கும்போதும் கேட்கும் அழுகுரலை தாங்க முடியவில்லை.

ADVERTISEMENT

இன்றோடு 9 நாட்கள் ஆகிறது. மாநில, தேசிய நெடுஞ்சாலையில் மக்களை சந்திக்க கூடாது என தடை விதிக்கிறார்கள். மக்கள் எங்கு உள்ளார்களோ அங்கு தான் சென்று சந்திக்க முடியும். யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஏன் தேமுதிகவை வஞ்சிக்கிறீர்கள்? இதுவரை தேமுதிகவால் யாருக்கும் பாதிப்பு இல்லையே.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் பிடித்து வீட்டுக்கு சென்றவர் இன்று வரை வெளியில் வரவில்லை. உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தையும் விஜய் நேரடியாக சென்று சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும். அவர் அறிவித்த பணத்தை நேரில் சென்று வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

கரூர் விவகாரத்தில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. 41 உயிருக்கு தமிழக அரசும், விஜய்யின் தவெக கட்சியும் பொறுப்பேற்க வேண்டும்.

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு என சொல்கிறார்கள். ஏன் மறைய வேண்டும், தூக்கிலா போட்டு விடுவார்கள், தலையை வாங்கி விடுவார்களா? எதையும் எதிர்கொள்ள தைரியம் வேண்டும்.

தமிழக அரசு செய்த 5 தவறுகளை பட்டியலிடுகிறேன். இன்றைக்கு இவ்வளவு கட்டுப்பாடு விதிக்கிறீர்கள். அதை தேமுதிக மதிக்கிறது. ஆனால் கரூரில் குறுகலான பாதையில் விஜய் பேச அனுமதி கொடுத்தது யார் என மக்கள் சார்பாக கேட்கிறேன். அது முதல் தவறு. அந்த கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுமதித்தது யார்? ஆம்புலன்ஸ் வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மூன்றாவது விஜய் பேசும்போது யார் செருப்பு, கல் வீசியது இதற்கு அரசு பதில் கூற வேண்டும்? இதுவரை செருப்பு வீசிய நபரை அரசு கைது செய்யாதது ஏன்? கட்சி தொண்டன் அந்தக் காரியத்தை செய்வானா?

உள்ளூர் ரவுடிகள் தான் அந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். இதில் மாற்றுக்கருத்தில்லை. ரவுடிகளை இயக்கியது அங்குள்ள 10 ரூபாய் மந்திரி தான். பக்கா பிளான் போட்டு, பக்கா ஸ்கெட்ச் போட்டு 41 உயிர்களை பறித்துள்ளனர். யார் மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும்.

கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போதிய காவல்துறை இல்லை. அங்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்று ஆட்சியாளர்கள் வருகிறார்கள் என்றால் 10,000 போலீசாரை ரோட்டில் நிற்கின்றனர். இந்த அனைத்திற்கும் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.

அதே நேரத்தில் விஜய் மீதும் தவறு உள்ளது. அதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

விஜய்யின் முதல் தவறு அவர் குறித்த நேரத்தில் வரவில்லை. உங்களை பார்க்கத்தானே குழந்தைகளை வைத்துக் கொண்டு தாய்மார்கள் உட்பட அனைவரும் காலை முதல் சாலையில் நிற்கிறார்கள். அந்த பொறுப்பு உங்களுக்கு வேண்டாமா?

7 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் வீட்டில் இருந்தே தனி விமானத்தில்தான் வருகிறீர்கள். விஜயகாந்த் 150 படங்கள் நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு அவர்தான் மேக்கப் உடன் முதல் ஆளாக வந்து நிற்பார். இந்த கடமை உணர்வை தவற விட்டிருக்கிறார் விஜய். அவர் படப்பிடிப்புக்கு சரியாக போய்விடுவார். ஆனால் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார்.

நாங்கள் கட்சி ஆரம்பித்தபோது காவல்துறை சப்போர்ட் கிடையாது. நமக்கு உண்மையாக இருந்தது தேமுதிக தொண்டர் படை தான் மக்களை பாதுகாத்தது. ஏன் அரசாங்கத்தையும், காவல்துறையும் நம்பி நீங்கள் போகிறீர்கள்? உங்களை நம்பி வந்த மக்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுத்தீர்கள்?

கரூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, ஜெனரேட்டர் தான் ஆஃப் ஆனது என கூறுவது சுத்தப்பொய்.

நம்பி வந்தவர்களுக்கு, தண்ணீர், சாப்பாடு, பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் அதை விஜய் செய்யவில்லை.

ஏதோ கூண்டுக்குள் புகுந்து கொள்வதை போல அவர் பேருந்துக்குள் புகுந்துகொள்கிறார். 4 மணி நேரம் நின்று வரவேண்டியது தானே விஜய்? விஜயகாந்த்தை அண்ணன் என கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என கற்றுக்கொள்ள வேண்டும். விஜய்யை நம்பி வந்த அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று வரை அவர் வெளியில் வராதது தவறு.

கைது செய்தால் கைது செய்து கொள்ளட்டும். கைது செய்யப்பட்ட தலைவர்கள் தான் வரலாற்றில் வாழ்ந்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து மக்கள் செத்தார்கள். இன்று சென்றவர்கள் ஏன் கள்ளகுறிச்சி செல்லவில்லை. கரூர் சம்பவத்தின் அனைத்துக்கும் பின்னால் அரசியல் உள்ளது. இதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்று பிரேமலதா பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share