பெண்களை இழிவுப்படுத்துவது கைதட்டி சிரிப்பது யாராக இருந்தாலும் எந்த கூட்டமாக இருந்தாலும் மிக மிக கண்டிக்கக் கூடியது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் நேற்று (மார்ச் 17) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக அரசின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது, “எனக்கு நடிகை நயன்தாரா வேண்டும் என்று கேட்டால் முதல்வர் அந்த கனவை நிறைவேற்றுவாரா?” என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது இந்தத் தரக்குறைவான கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், குஷ்பூ, அமீர் உள்ளிட்ட திரை துறை பிரபலங்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பிரேமலதா எச்சரிக்கை
இந்நிலையில், இன்று (மார்ச் 18) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். நான் ஒரு பெண். எந்த பெண்ணாக இருந்தாலும் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்தக் கேள்வியை கேட்டால் அவர்கள் ஒத்துக் கொள்வார்களா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், “யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் பெண்களை இழிவு படுத்துவதை தயவு செய்து இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அது நடிகர்களாக இருந்தாலும் சரி. எந்த பெண்ணாக இருந்தாலும் சரி. இல்லையென்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளை ஒன்றாக திரட்டி மிகப்பெரிய ஒரு ஆர்ப்பாட்டத்தையும் கண்டனத்தையும் பெண்கள் சார்பாக நான் முன்னெடுப்பேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஒவ்வொரு பெண்ணும் இன்று குடும்பத்தின் ஆணிவேர் பெண்களை மதிக்கும் வகையில் தான் நாம் தாய் நாடு, குலதெய்வம், அம்மன் என்று சொல்கிறோம். பெண்களை இழிவுப்படுத்துவது கைதட்டி சிரிப்பது யாராக இருந்தாலும் எந்த கூட்டமாக இருந்தாலும் மிக மிக கண்டிக்கக் கூடியது. எந்த கட்சியாக மதமாக ஜாதியாக இருந்தாலும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
