மச்சினன் தயவு இருந்தா மலையேறி ஜெயிக்கலாம் என்பார்கள் . அது போல சினிமாவில் எம் எஸ் பாஸ்கருக்கு ஒரு நல்ல கேரக்டர் இருந்தால் அவரை வைத்து யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் கவனிக்கவும் கேரக்டர் அல்ல. நல்ல கேரக்டர்.
பிராங்க் வீடியோக்கள் என்பவை பல சமயம் எரிச்சலானவை. அடுத்தவர் விஷயத்தில் நாகரீகம் இன்றி வரம்பு மீறுபவை. பலர் இந்த பிராங்க் வீடியோக்களை எடுத்தாலும் ஃபிராங்க் ஆக தன்னை பிராங்க் ஸ்டார் என்று அறிவித்துக் கொண்டவர் ராகுல்.
அந்த பிராங்க் ஸ்டார் ராகுல் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) . படத்தில் இவரும் எம் எஸ் பாஸ்கரும் கதை நாயகர்களாக நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார், அஞ்சலி ராவ் , அபிநயா ஆகியோர் உடன் நடிக்கிறார்கள்.
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது .
ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகிறது என்கிறது படக்குழு. (எந்த அளவு உண்மை என்பது படம் வரும்போதுதான் தெரியும் )
இரு முன்னணி நடிகர்களின் சர்ப்ரைஸ் கேமியோவும் இருக்காம் . (முன்னணி நடிகர்களா இல்லையா என்பதே சர்ப்ரைசாக இருக்காதுதானே?)
படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரஞ்சன் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார். ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
பிராங்க் ஸ்டார் ராகுலின் பிராங்க் வீடியோக்கள் பிரபலமானவை. ஆனால் அவர் இதுவரை காமெடி நடிகராக நடித்த எந்தப் படத்திலும் காமெடி காமெடியாக இருந்ததே இல்லை. ‘ஐயோ வந்து விட்டாரே….’ என்றுதான் ஆடியன்ஸ் பயப்படுவார்கள் . சினிமாவில் அவர் செய்த பிராங்க் இதுதான் .
‘டைரக்டர்’ ராகுலாவது அதை மாற்றி சரியான பங்களிப்பு கொடுப்பாரா? இல்லை தயாரிப்பாளருக்கு பிராங்க் இல்லாத நிஜ அதிர்ச்சி கொடுப்பாரா ?
— ராஜ திருமகன்
