’குழந்தைங்கன்னா குண்டா, புஸுபுஸுன்னு சினிமா ஸ்டார் மாதிரி இருக்க வேண்டாமா’ என்கிற வார்த்தைகளை நிறையவே கேட்டிருப்போம். prabhas new fitness look fans overjoy
திரை நட்சத்திரங்களின் மினுமினுப்பும் வளமையும் செழிப்பான வாழ்வுக்கான உதாரணமாக ஒருகாலத்தில் குறிப்பிடப்பட்டதுண்டு. கொழுக் மொழுக்கென்று ‘க்ளீன் ஷேவ்’ செய்த காலம் மலையேறி தாடி மீசையுடன் திரிவது பேஷன் என்றானது போல மேற்சொன்ன எண்ணத்திலும் மாற்றம் நிறையவே வந்துவிட்டது.
அதனாலேயே, வாசல் கதவு தடுக்கிற வண்ணம் குண்டான உடல்வாகுடையவர்கள் சட்டென்று 26 சைஸ் இடுப்பளவுக்கு மாறுவது நிகழ்ந்து வருகிறது.

திரையுலக நட்சத்திரங்களில் பலர் அப்படி ஒல்லியான உடல்வாகுக்கு மாறி, தமது ரசிகர்களுக்கு ‘எடை குறைப்பு’ விஷயத்தில் முன்னுதாரணமாகி இருக்கின்றனர்.
‘நான் கடவுள்’ படப்பிடிப்புக்காக எடை குறைப்பில் ஈடுபட்ட அஜித்குமார், அதே உடல்வாகுடன் ‘வரலாறு’, ‘பரமசிவன்’, ‘திருப்பதி’ படங்களில் நடித்தார். அந்த நேரத்தில் அவர் எடுத்துக்கொண்ட ‘போட்டோஷூட்’ இன்றும் அவரது தீவிர ரசிகர்களுக்குப் பிடித்தமானது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் ‘எமதொங்கா’ படத்தில் நடித்தபோது பெருமளவு எடை குறைந்து புதிய தோற்றத்தில் காட்சியளித்தார் ஜுனியர் என்.டி.ஆர். அந்த தோற்றம் அவரது கேரியரையே மாற்றியமைத்தது. தொடர்ச்சியாகப் பல படங்கள், பல ஆண்டுகள் கடந்து கொஞ்சம் ‘வெயிட்’டான தோற்றத்திற்கு மாறியவர், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கிற படத்திற்காகக் கணிசமாக எடை குறைந்திருக்கிறார்.
சில நாயக நடிகர்கள் பெரிதாக எடை குறைக்காமல், விஎஃப்எக்ஸ் வழியே இது போன்ற தோற்ற மாறுபாட்டைத் திரையில் வெளிப்படுத்துகின்றனர். ஆனாலும், ’ரசிகர்களை ஈர்க்க அது போதாது’ என்று சிலர் அதீத எடைகுறைப்பில் இறங்குகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் பாகுபலி பிரபலமான பிரபாஸ்.
’சீதாராமம்’ தந்த இயக்குனர் ஹனு ராகவபுடியின் அடுத்த படமான ‘பௌஜி’யில் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் நிகழ்கிற ஆக்ஷன் கதையாக அது வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
அப்படத்தில் நடிப்பதற்காக ஒல்லி உடல்வாகுக்கு மாறியிருக்கிறார் பிரபாஸ். சமீபத்தில் அதன் படப்பிடிப்பில் பங்கேற்றபோது இவ்விஷயம் வெளியே தெரிய வந்திருக்கிறது. இதே தோற்றத்துடன் சந்தீப் வங்கா ரெட்டியின் ‘ஸ்பிரிட்’ படத்திலும் இடம்பெறப் போகிறார் பிரபாஸ்.
‘கண்ணப்பா’வில் ருத்ரன் பாத்திரத்தில் பிரமாண்டமாகத் திரையில் தெரிந்தபோதே, ‘பிரபாஸ் ஏன் இப்படியாகிவிட்டார்’ என்ற எண்ணம் பலரது மனிதர் எழுந்தது. அந்த மைண்ட்வாய்ஸை அவர் முன்கூட்டியே ‘கேட்ச்’ பண்ணியது சிறப்பான விஷயம் தான். prabhas new fitness look fans overjoy