கோடிக்கணக்கில் பணமோசடி செய்த புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸார் இன்று (ஜூலை 30) கைது செய்தனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான லத்திகா படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்தியவர் சீனிவாசன். அப்போது தனது பெயருக்கு முன்னே பவர் ஸ்டாரையும் சேர்த்துக்கொண்டார்.

பின்னர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கவண் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் திலீப்குமார் என்பவரிடம், ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி, அதற்கு கமிஷன் தொகையாக ரூ. 5 கோடியை முதலில் வாங்கிக்கொண்டு சீனிவாசன் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக திலீப் குமார் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் (EOW) அளித்த புகாரின்படி, சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்துவந்தார்.
இந்த நிலையில், மோசடிப் புகார் தொடர்பாக டெல்லி போலீசார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே அவர் மீது நிதி மோசடி தொடர்பாக சென்னையில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திரைப்பட தயாரிப்பு மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான நிதியை மோசடியாக திருப்பி அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. சென்னையில் இதேபோல் 6 மோசடி வழக்குகளில் தொடர்புடையதும் விசாரணயில் தெரியவந்தது. மேலும் அரசியல் கட்சிகளிலும் தொடர்பில் இருந்த சீனிவாசன் 2013 ஆம் ஆண்டு மோசடி புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.