திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது : கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை!

Published On:

| By Kavi

திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினருக்கு கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக -காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதமே நடந்து வருகிறது. ஆட்சியில் பங்கு என எம்.பி.மாணிக்கம் தாகூர் போன்றோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ஆனால் ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கு சரியாக வராது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இந்தசூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (பிப்ரவரி 17) சென்னை வந்தார்.

ADVERTISEMENT

தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தலுக்கான களப்பணிகள் மற்றும் பிரசார உத்திகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ADVERTISEMENT

அப்போது பேசிய வேணுகோபால், “திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான கூட்டணிக் கட்சிகள் ஆகும். பாசிச மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்காக இந்த இரண்டு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும். தற்போது நாங்கள் ஒற்றுமையாக நீடிக்கிறோம். 

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும்.  இதற்காகத் திமுக தரப்பிலிருந்து வரும் அழைப்பிற்காகக் காத்திருக்கிறோம்” என்றார். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் கூட்டணியில் ‘ஆட்சியில் பங்கு’ அல்லது மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பது குறித்துக் கேட்டபோது,  “அவை அனைத்தும் அந்தந்த நபர்களின் தனிப்பட்ட கருத்துக்களே தவிர, அவை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. 

தமிழ்நாடு தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம், காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்தாலோசித்து எடுப்பார்கள். 

கூட்டணி குறித்துச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பொதுவெளியில் பேச மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.  காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும். இதை மீறினால்  ஒழுங்கீனமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share