முனைவர். ச.குப்பன்
உலகளவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவிற்கு வறுமை ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகவே உள்ளது. இருப்பினும், சமீபத்திய தரவுகள், குறிப்பாக 1991 ஆம் ஆண்டிற்கு பிறகு, வறுமையைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் காட்டுகின்றன.
இந்தியாவின் வறுமையின் தீவிரமானது, கூர்மையான சரிவைக் குறிக்கிறது என 2025 ஆம் ஆண்டுக்கான உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது, இந்த வறுமை குறைப்பின் விகிதம் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் 45 ஆண்டுகளில் மிகவும் குறைவாக இருந்தது.
1991 இல் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, வளர்ச்சி விகிதத்தின் அதிகரிப்புடன் வறுமைக் குறைப்பின் வேகம் அதிகரித்தது. அதாவது 1950களில் 56% ஆக இருந்தது, 2011-12 இல் 16.2%ஆக குறைந்தது அதன்பின்னர் 2022-23 இல் வெறும் 2.3% ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் வறுமையின்நிலை 0.0%ஆகவேண்டும் என்பதே நம்முடைய முதன்மை குறிக்கோளாகும். பொதுவாக வளர்ச்சிக்கும் வறுமைக் குறைப்புக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது.
எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால், அது வறுமையைக் குறைக்க வழிவகுக்கும். இந்த மகத்தான முயற்சி 171 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையிலிருந்தும், 378 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்தும் (குறைந்த நடுத்தர வருமான வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள்) மீட்டுள்ளது. இந்த முன்னேற்றம் ஊரகபகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வறுமை குறைப்புகளுடன் பரந்த அடிப்படையிலானதாகும், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இலக்கு வைக்கப்பட்ட நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதும் காரணமாகும்.
இந்தியாவில் வறுமைக்கான காரணங்கள்
இந்தியாவில் வறுமை என்பது ஆழமாக வேரூன்றிய வரலாற்று, சமூக, பொருளாதார காரணங்களைக் கொண்ட பன்முகப் பிரச்சினையாகும். தனிநபர்களும் சமூகங்களும் வறுமையிலிருந்து தப்பிக்க கடினமாக இருக்கின்ற ஒரு தீய சுழற்சியை உருவாக்குகின்ற பின்வரும் காரணிகள் பெரும்பாலும் பின்னிப் பிணைந்துள்ளன.
மக்கள்தொகை வளர்ச்சி: வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையானது, உணவு, வீட்டுவசதி உள்ளிட்ட கிடைக்கக்கூடிய வளங்களின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது வேலை வாய்ப்பின்மை (unemployment) வேலையின்மை (underemployment) ஆகிய பிரச்சினைகளை அதிகரிக்கசெய்கிறது, இதனால் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்கள் ஈட்டுகின்ற வருமானம் போதுமானதாக இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை கடினமாக்குகிறது.

வரலாற்று, சமூக காரணிகள்: காலனித்துவ ஆட்சியின் மரபு, சாதி அமைப்பின் நிலைத்தன்மை ஆகியவை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி தொடர்ந்து அவ்வேற்றதாழ்வுகளை நிலையாக நிறுத்தியுள்ளன. விளிம்புநிலை சமூகங்களுக்கு பெரும்பாலும் கல்வி, வேலைவாய்ப்பு, நில உடைமை ஆகியவற்றில் சம வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, இதனால் அவர்கள் வறுமை சுழற்சியில் சிக்க வைக்கப்படுகிறார்கள். ஈட்டுகின்ற வருவாயில் பெரும் பகுதியை சமூக விழாக்களுக்கு செலவிடுவது போன்ற பாரம்பரிய சமூக பழக்கவழக்கங்களும் பொதுமக்களை கடனிலும் வறுமையிலும் தள்ளுகின்றது.
பொருளாதார சிக்கல்கள்
குறைந்த வேளாண் உற்பத்தித்திறன்: இந்தியாவின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் வேளாண்மையையே சார்ந்துள்ளனர். இருப்பினும், துண்டு துண்டான சிறியஅளவிலான நில உடைமைகள், நவீன தொழில்நுட்பத்தினை பின்பற்றாமை, பாரம்பரிய வேளாண்மை முறைகளை சார்ந்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக குறைந்த உற்பத்தித்திறன் பல ஊரகபகுதி வாழ் குடும்பங்களுக்கு குறைந்த, நிலையற்ற வருமானத்தை ஏற்படுத்துகிறது.
வேலை வாய்ப்பின்மையும் (unemployment) வேலையின்மையும் (underemployment) : பெரிய அளவிலான பணியாளர்களை உள்வாங்க போதுமான உயர்தர வேலைகளை தற்போதைய ஊரகப்பகுதியின் வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தால் உருவாக்க முடியவில்லை. இது அதிக வேலை வாய்ப்பின்மை, வேலையின்மை விகிதத்திற்கு வழிவகுக்கிறது, அதனால் பொதுமக்கள் குறைந்த ஊதியம் பெறும், முறைசாரா வேலைகளில் அரைகுறை வேலைகளிலும் வேலைவாய்ப்பில்லாமலும் இருக்கிறார்கள்.

சமமற்ற செல்வப் பகிர்வு: இந்தியாவில் தற்போது பொருளாதார வளர்ச்சி உயர்ந்து கொண்டே இருந்தபோதிலும், ஈட்டப்படுகின்ற செல்வமும் வளங்களும் பெரும்பாலும் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே குவிந்து வருவதால், குறிப்பிடத்தக்க அளவு வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த சமத்துவமின்மை பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவு மக்களுக்கு கிடைப்பதைத் தடுக்கிறது.
சமூக உள்கட்டமைப்பு பற்றாக்குறை: சுகாதாரம், கல்வி, துப்புரவு போன்ற முக்கிய சமூகத் துறைகளில் போதுமான முதலீடு இல்லாதது வறுமையை நிலைநிறுத்துகிறது. தரமான கல்விக்கான அணுகல் இல்லாதது எதிர்கால வாய்ப்புகளை மட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் மோசமான துப்புரவும், சுகாதாரமும் அதிக மருத்துவச் செலவுகளையும் வேலை நாட்களை இழக்கவும் வழிவகுக்கிறது, அதன்வாயிலாக ஊரகப்பகுதிகளில் வாழும் குடும்பங்களை நிதி நெருக்கடியில் தள்ளுகிறது.
வறுமையின் விளைவுகள்
வறுமையின் விளைவுகளானவை பரவலாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் உள்ளன, இது தனிநபர்களை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது.
பசிபட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு: வறுமையானது தனிநபரின் உணவுப் பாதுகாப்பின்மையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது, இது பரவலான பசிபட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது, குறிப்பாக குழந்தைகள் மத்தியில். இது அவர்களின் வளர்ச்சி குன்றுவதற்கும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதற்கும், நீண்டகால ஆரோக்கியம் ,உற்பத்தித்திறனைப் பாதிக்கும் நோய் அபாயத்தை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கின்றது.
மோசமான சுகாதாரம், கல்வி: வறுமையானது சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலும் ஏழைகளை தரமான மருத்துவ சிகிச்சையை பெறமுடியாமல் தவிக்கச்செய்கிறது, இது எளிதாகத் தடுக்கக்கூடிய நோய்களுக்கும் அதிக இறப்பு விகிதங்களுக்கும் வழிவகுக்கிறது. இதேபோன்று, கல்விக்கான அணுகல் இல்லாதது வறுமை சுழற்சியை நிலைநிறுத்துகிறது, ஏனெனில் இது வேலை வாய்ப்புகளையும் பொருள் ஈட்டுகின்ற திறனையும் கட்டுப்படுத்துகிறது.
சமூக விலக்கு: வறுமையானது பெரும்பாலும் சமூக விலக்கிற்கு வழிவகுக்கிறது, அங்கு தனிநபர்களும் சமூகங்களும் ஒதுக்கப்பட்டு, முதன்மை சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றன. இது உதவியற்ற தன்மை, அரசியல் குரல் இல்லாத உணர்வுகளை உருவாக்குகின்றது, மேலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திறனை மேலும் தடுக்கின்றது.
குறைந்த பொருளாதார உற்பத்தித்திறன்: வறுமையில் வாழும் மக்கள் தொகையில் ஒரு பெரிய பகுதியினர் முழு திறனுடன் பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியாத நிலை உருவாகின்றது. மோசமான சுகாதாரம், திறன்மேம்பாடுகள் இல்லாமை, வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனைக் குறைத்து தேசிய பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்குகின்றன.
வறுமையை வெல்லும் வழிகள்
இந்திய அரசாங்கம் வறுமையை சமாளிக்க பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகின்றது, பொருளாதார வளர்ச்சி, சமூக நலன், நேரடி சலுகை பரிமாற்றங்கள் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையில் கவனம் செலுத்துகிறது.
வறுமை ஒழிப்பு திட்டங்கள்: சமூக பாதுகாப்பு எனும் வலையை வழங்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கவும் இந்திய அரசாங்கம் பின்வரும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA): இந்தத் திட்டம் ஊரகப்பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு 100 நாட்கள் கூலியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது, இது ஒரு முக்கியமான வருமான ஆதாரத்தை வழங்குகிறது.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM): இந்த முயற்சி சுய உதவிக்குழுக்கள் (SHGs) மூலம் ஊரகப்பகுதிவாழ் ஏழைகளை மேம்படுத்துவதிலும், சுய வேலைவாய்ப்புக்கான கடன் அணுகலை எளிதாக்குவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY): இந்தத் திட்டம் நகரப்பகுதி, ஊரகப்பகுதிவாழ் ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குகிறது, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துகிறது.
பொருளாதார சீர்திருத்தங்கள், உள்ளடக்கிய வளர்ச்சி: சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் முக்கியமானதாகும். உற்பத்தித்திறனை மேம்படுத்த வேளாண்மையில் முதலீடுகள், நகரப்பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், செல்வ வளத்தினை சமமாக பங்கீடுசெய்வதை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
சமூகத் துறைகளில் முதலீடு: கல்வி, சுகாதாரம், துப்புரவு ஆகியவற்றில் அதிகரித்த, மிகவும் பயனுள்ள முதலீடு மிக முக்கியமானதாகும். தரமான கல்வி, சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய அணுகல் ஏழைகளை வறுமை சுழற்சியிலிருந்து விடுபட அதிகாரம் அளிக்கும். ஜல் ஜீவன் மிஷன் (குழாய்வழி குடிநீர் வழங்குதல்), ஆயுஷ்மான் பாரத் (உலகளாவிய சுகாதார பாதுகாப்பு) போன்ற முயற்சிகள் இந்த திசையில் முக்கியமான படிகளாகும்.
எளிதான நிதிசேவை: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா போன்ற திட்டங்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகளை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கின்றன, இதனால் வழங்கப்படும் உதவித்தொகைககள், கடன்கள், பிற நிதித் திட்டங்கள் ஆகியவற்றினை அனைவரும் எளிதாக அணுக முடியும்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்: சாதி அமைப்பு, பாலின பாகுபாடு போன்ற சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய சமூகத் தடைகளை அகற்ற அரசாங்கமும் சமூகமும் ஒன்றிணைந்து செயல்படுவதன் வாயிலாக இந்தியாவில் வறுமையை இல்லாது ஒழித்திடமுடியும்.