உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டு இருந்த போது, நீதிமன்ற அறையில் இருந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் அவர் மீது காலணியை வீச முயன்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது அவர் சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூச்சலிட்டார். இந்திய பார் கவுன்சில் ராகேஷ் கிஷோரை இடை நீக்கம் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “தனது செயலுக்கான அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான் இதைச் செய்தேன். இதையெல்லாம் செய்வதற்கு கடவுள்தான் என்னை தூண்டினார்” என தெரிவித்து மேலும் சர்ச்சையை கிளப்பினார்.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் செயலுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரேஸ் கோர்ஸ், உப்பிலிபாளையம், டவுன்ஹால், உக்கடம் போன்ற மாநகரின் முக்கிய பகுதிகளில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில் ” தலித் சமூகத்தின் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது இந்திய தலைமை நீதிபதியே தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறார் என்றும், “I LOVE AMBEDKAR, Need justice for Chief Justice.. நீதிபதிக்கு நீதி தேவைப்படுகிறது ! சாதாரண குடிமக்களின் நிலை? ஒன்றிய அரசு உறங்குகிறதா What is This ji ? Hamare Desh Me ji ! என்று பா.ஜ.க வினர் மற்றும் பிரதமரை விமர்சிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.