விழுப்புரத்தின் பல பகுதிகளில் தளபதியை காப்போம் தமிழகத்தை மீட்போம் என விஜய்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் பேசிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கிளம்பியது குறித்து நீதிமன்றம் கடுமையாக கருத்துகளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் விழுப்புரம் நகரின் பல பகுகளில் 2 விதமான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். தவெகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கில்லி சுகர்ணா பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ‘கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு ஆழ்ந்த இரங்கல்.. தளபதியை காப்போம்.. தமிழகத்தை மீட்போம். எவ்வளவு வலிகளை தந்தாலும் நாங்கள் வழி மாற மாட்டோம்.. #We Stand with thalapathy Vijay’ என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.