’கூலி’ படத்தில் வரும் ‘மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி’ பாடலை இதுவரை கிட்டத்தட்ட 7 கோடி பேர் வரை யூடியூபில் கேட்டு ரசித்திருக்கின்றனர். அதுபோக இன்ஸ்டாரீல்ஸ் ஆக, ட்விட்டரில் காணொலியாக பகிர்ந்தவற்றின் எண்ணிக்கை இன்னும் சில மடங்கு இருக்கக்கூடும். தமிழ் தவிர்த்து பிற மொழி ரசிகர்கள் இப்படத்தைக் காண்பதற்கான ‘விசிட்டிங் கார்டு’ ஆகவும் இப்பாடல் மாறி வருகிறது என்றால் அது மிகையல்ல.
இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே உடன் சௌபின் ஷாகிர், ரிஷிகாந்த் ஆகியோர் நடனமாடியிருப்பதை டீசர், ட்ரெய்லர், பாடல் வீடியோ நமக்குக் காட்டின. குறிப்பாக, சௌபின் ஷாகிரின் மூவ்மெண்ட்களுக்கு தனி ரசிகர் படையே உருவாகிவிட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் கூலி படம் குறித்தும், மோனிகா பாடல் பற்றியும் பேசியிருக்கிறார்.
“இந்த பாடலை மோனிகா பெலூச்சி ரசித்தார் தெரியுமா” என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பத்திரிகையாளர் அனுபமா சோப்ரா சொல்ல, அதைக் கேட்டு பூஜா ஹெக்டே முதலில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்; பின்னர், வியப்பின் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார்.
மர்ரகெச் திரைப்பட விழாவை நடத்தும் மெலிட்டா டோஸ்கன் என்பவரைத் தமக்குத் தெரியும் என்றும், அவர் மோனிகாவின் நட்பு வட்டத்தில் இருப்பவர் என்றும் பூஜாவிடம் கூறிய அனுபமா, ‘கூலி பாடல் மோனிகா பெலூச்சிக்கு பிடித்தது’ என்ற தகவலும் மெலிட்டா மூலமாகத் தனக்கு தெரிய வந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
அதனைக் கேட்டதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்த பூஜா ஹெக்டே, நிறைய ரசிகர்கள் மோனிகா பெலூச்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாடலை ‘டேக்’ செய்திருந்ததாகக் கூறியிருக்கிறார்.
‘பாகுபலி 3’ உருவாக்கப்பட்டால், அதில் பிரபாஸின் ஜோடியாக நடிக்க வேண்டும்; கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ தனது நடிப்பு திறமையைக் காட்டும் வாய்ப்பை வழங்கியது; ’ராதே ஷ்யாம்’ போன்ற ‘பான் இந்தியா’ படங்களை விட ‘அலா வைகுண்டபுரம்லோ’ போன்ற தென்னிந்தியப் படங்களே தனக்கு நிறைய அங்கீகாரத்தைத் தந்தன என, ’மோனிகா’ பாடல் பற்றி மட்டுமல்லாமல் இப்படிப் பல விஷயங்களை அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறாராம் பூஜா ஹெக்டே.