விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜன நாயகன் படத்தில் நடித்தது குறித்து நடிகை பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய்நகர்த்தி வரும் அவர் தனது கடைசி படமாக ஹெச்.வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் திருநாளையொட்டி ஜனவரியில் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடலுக்கு ஆடி கவனம் சேர்த்துள்ள நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அதில் ஜனநாயகன் மற்றும் விஜய்யுடன் கடைசி படத்தில் பணிபுரிந்ததை பற்றி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் ஒரு சூப்பர் ஸ்டார்!
அவர் பேசுகையில், “ஜனநாயகன் படத்தில் நடித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால், ஜனநாயகன் பட ஷூட்டிங்கின் கடைசி நாளில் நான் சோகமாக இருந்தேன். விஜய் சாருடன் பணிபுரிவது மிகவும் சூப்பரான அனுபவம். அவர் மிகவும் கூலான மற்றும் முற்றிலும் அமைதியான நபர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் தன்னுடைய இயல்பில் மிகவும் வசதியாக இருப்பதால் அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை.
உண்மையில் அவர் பணிபுரிய மிகவும் இனிமையான சக நடிகர் என்று என்னால் கூற முடியும். படப்பிடிப்பில் விடைபெற்றாலும், அடுத்த ஆண்டு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரை மீண்டும் பார்க்க முடியும். ஜனவரியில் வெளியாகும் ஜனநாயகன் படத்திற்காக இப்போதே நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அவருக்கு பெரிய கனவுகள் உள்ளன!
மேலும் விஜய்யின் அரசியல் பயணம் பற்றி கூறுகையில், “விஜய் சாருக்கு மனதில் பெரிய பெரிய கனவுகள் உள்ளன, அதை அவர் பின்பற்றி செல்ல வேண்டும்” என பூஜா ஹெக்டே வாழ்த்து தெரிவித்தார்.
ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே தவிர்த்து பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, தீஜய் அருணாசலம் மற்றும் சுனில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு வேலையில் ஈடுபட்டு வருகிறார்.