தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் திருவிழா நடைபெற உள்ள நிலையில், இன்று போகி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. புகை மூட்டம் காரணமாக சென்னையில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையிலேயே பழைய பொருட்களைத் தெருக்களில் போட்டு எரித்தனர்.
கடும் பனி மூட்டம் நிலவும் நிலையில், சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் பழைய பொருட்களை எரிக்கும்போது ஏற்படும் கடும் புகை மூட்டத்தால், விமான நிலைய ஓடுபாதை முற்றிலும் மறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக புதன்கிழமை (ஜனவரி 14) அதிகாலை முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில விமானங்கள் காலதாமதமாகப் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.40 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானம், இன்று அதிகாலை 3.05 மணிக்கு புனை செல்லும் விமானம், காலை 6.35 மணிக்கு கோவை செல்லும் விமானம், காலை 7.15 மணிக்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு தில்லி செல்லும் விமானம் ஆகிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் தில்லியில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு சென்னை வரும் விமானம், காலை 6.35 மணிக்கு மும்பையில் இருந்து வரும் விமானம், காலை 7.10 மணிக்கு புனையில் இருந்து வரும் விமானம், காலை 9.10 மணிக்கு கோவையிலிருந்து வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து புதன்கிழமை காலை 5.40 மணிக்கு விஜயவாடா செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.40 மணிக்கும், காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 9.05 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு
போகி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் காற்றின் மாசு சராசரி அளவில் இருந்து உயர்ந்துள்ளது.இன்று காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டி – 196, மணலி – 144, கொடுங்கையூர் – 123, அரும்பாக்கம் – 177, காந்தி நகர் (எண்ணூர்) – 144, பெருங்குடி – 103, வேளச்சேரி – 76, ராயபுரம் – 64 ஆக உள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
