கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மாநில அமைச்சரவையில் இருந்து 15 அமைச்சர்கள் நீக்கப்பட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023-ல் நடைபெற்றது. அப்போது முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
அந்த நிலையில், சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும் டிகே சிவகுமார் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் முதல்வர் பதவி வகிக்கலாம் என அறிவுறுத்தி டெல்லி காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் கடந்த சில மாதங்களாக சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சித்தராமையா ஆதரவு அமைச்சர்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் தமது ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லியில் நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, கர்நாடகா அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருடன் சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார்.
இச்சந்திப்புகளின் பின்னர் கர்நாடகாவில் அதிரடி அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்கிற தகவல்கள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கர்நாடகாவில் தற்போதைய அமைச்சர்கள் 15 பேரை நீக்க சித்தராமையா முடிவு செய்துள்ளதாகவும் இதனால் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சர் பதவி கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில், கர்நாடகா அமைச்சரவையில் இளைஞர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
