காப்பீட்டு விளம்பரங்களை தவறாக வழிநடத்தியதற்காக பாலிசிபஜார் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய ஆன்லைன் காப்பீட்டு ஒருங்கிணைப்பு தளமாக பாலிசிபஜார் செயல்பட்டு வருகிறது. எனினும் எந்தவிதமான ஒப்பீட்டு வாய்ப்புகளையும் வழங்காமல், சில காப்பீட்டு தயாரிப்புகளை மட்டும் ‘சிறந்தது’ எனக் குறிப்பிட்டு வருவதாக புகார் எழுந்தது. இதன்மூலம் குறிப்பிட்ட காப்பீட்டு தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கும் மற்றவற்றை விட உயர்ந்தவை என வாடிக்கையாளர்களை நம்ப வைக்கக்கூடும் எனவும், மேலும் குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) விசாரணை நடத்தியது.
அப்போது, பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், ஐந்து காப்பீட்டாளர்களிடமிருந்து ULIP (யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்) மட்டுமே பாலிசிபஜாரின் வலைத்தளம் காட்டியது. இதேபோல், சுகாதார காப்பீட்டுப் பிரிவில் 23 கூட்டாளர் காப்பீட்டாளர்களில் 12 பேரிடமிருந்து மட்டுமே ‘சிறந்த திட்டங்கள்’ இடம்பெற்றிருந்தன.
இதன்மூலம் பாலிசிபஜாரின் அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள் மற்றும் கமிஷன் கட்டமைப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக பாலிசிபஜார் நிறுவனத்திற்கு ரூ.5 கோடியை அபராதமாக விதித்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ.ஐ. காப்பீட்டுச் சட்டம், 1938 இன் பிரிவு 102 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது காப்பீட்டு விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நிதி அபராதங்களை விதிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.