திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு சேர்ந்து வாழ மறுப்பதாக குற்றம் சாட்டி ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் வரும் செப்டம்பர் – 26ம் தேதி ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜ்க்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பிரபல சமையைல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சேர்ந்து வாழ மறுப்பதாக ஆடையலங்கார நிபுணர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த சமூக வலை தள பதிவுகளில் அவர் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து பல தருணங்களில் எடுத்த படங்களை பதிவிட்டிருந்தார். இதுகுறித்த ஜாய் கிரிசில்டா வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 24) நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி பாகசாலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”கிரிசில்டாவின் சமூக வலைத்தள பதிவுகளால் ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் செப்டம்பர் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது. நிறுவனத்தின் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட விவகாரத்துக்காக நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஒரு இயக்குநரின் விவகாரத்தால் கம்பெனிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் கம்பெனி பற்றி தேடினால், மெனு கார்டுக்கு பதில், கிரிசில்டாவின் வீடியோ தான் வருகிறது. இவை அனைத்தையும் கிரிசில்டா பணத்துக்காகவே செய்கிறார்” என வாதிட்டார்.
மேலும் நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி வழக்கில் சமூக வலைதளங்கள் இருவர் பற்றி செய்தி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தங்களுக்கும் பொருந்தும் என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து கிரிசில்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்யப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது என எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை” என வாதிட்டார்.
மேலும் ”திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து ரங்கராஜ்க்கு எதிராக புகார் அளித்த 3 நாட்களில் வழக்கு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பே மிசஸ் ரங்கராஜ் என புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனால் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கும், கிரிசில்டா கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
கிரிசில்டா நீதி கேட்டு குரல் கொடுத்திருக்கிறார். கருவில் வளரும் குழந்தைக்காக போராடுகிறார்.மாதம்பட்டி ரங்கராஜுக்கு மற்றவர்களுடனும் தொடர்பு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ரவி மோகன் வழக்கு தீர்ப்பு இந்த வழக்குக்கு பொருந்தாது” என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்நிலையில் திருமணம் செய்து ஏமாற்றிய ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் வரும் செப்டம்பர் 26ம் தேதி ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜ்க்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.