கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலை இன்று (மார்ச் 5) போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதில் தப்ப முயன்ற முக்கியக் குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை புறநகர் பகுதிகளில் ஏராளமான தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வெளியூர்களிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்களைக் குறிவைத்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த சில நாட்களாக மிரட்டிப் பணம், லேப்டாப் மற்றும் செல்போன்களைப் பறித்து வந்துள்ளனர்.
போலீஸ் துப்பாக்கி சூடு
தொடர் வழிப்பறி குறித்து பல்வேறு மாணவர்கள் புகார் அளித்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து இது குறித்து விசாரித்தனர். அப்போது சிவகங்கை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் சூலூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாலமுருகனைப் பிடிக்க போலீசார் சென்றனர்.
அப்போது, அங்கிருந்து தப்ப முயன்ற பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரைத் தாக்கினார். இதில் சூலூர் உதவி ஆய்வாளர் யுவராஜுக்கு காயம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதையடுத்து, தற்காப்பிற்காக ஆய்வாளர் பிரேம் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டதில் பாலமுருகனின் வலது காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சித் தகவல்:
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலமுருகன், ஆனந்தன், நவீன், முகேஷ், விஷால் ஆகியோர் கைது செய்ப்பட்டுள்ளனர். இதில் விஷால் என்பவர் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் சக மாணவர்கள் எங்குத் தனிமையில் தங்கியிருக்கிறார்கள் என்ற ரகசியத் தகவல்களைத் திருட்டுக் கும்பலுக்குக் கொடுத்து உடந்தையாக இருந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் கைதானவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை:
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எஸ்.பி. கார்த்திகேயன், காயமடைந்த உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வழக்கில் பாலமுருகன் உட்பட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. குற்றவாளிகள் போலீசாரைத் தாக்கியதால் குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் தவறான வழிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அறைகளில் தங்குபவர்கள் மற்றும் தங்களோடு இருப்பவர்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என அறிவுறுத்தினார்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
