ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷனின் ஜாமினை உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) ரத்து செய்த நிலையில் பெங்களூருவில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நடிகையும் தனது தோழியுமான பவித்ரா கவுடாவை சமூகவலைதளத்தில் விமர்சித்த தனது ரசிகர் ரேணுகா சாமி என்பவரை கன்னட நடிகர் தர்ஷன் கடத்தி சென்று கொலை செய்ததாக புகார் எழுந்தது.
இவ்வழக்கில் நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் என 17 பேர் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் பெங்களூரு போலீசார் 3,991 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் கவுடாவை முதல் குற்றவாளியாகவும், தர்ஷனி இரண்டாவது குற்றவாளியாகவும் குறிப்பிட்டனர்.
மொத்தம் 131 நாட்கள் சிறையில் கழித்த பிறகு, அக்டோபர் 30ஆம் தேதி இடைக்கால ஜாமினில் தர்ஷன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். டிசம்பர் 13ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தர்ஷன், கவுடா மற்றும் இணை குற்றவாளிகளான பிரதூஷ் ராவ், ஜெகதீஷ் என்கிற ஜக்கு உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து தான் நடித்து வரும் டெவில் படத்தின் சூட்டிங்கை முடித்தார். தொடர்ந்து அப்படத்தின் ப்ரோமோசன் பணிகளில் தர்ஷன் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அதன் ஒரு பகுதியாக சுதந்திர தினத்தையொட்டி, டெவில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “இத்ரே நெம்டியாக் இர்பெக் (நீங்கள் வாழ்ந்தால், நிம்மதியாக வாழுங்கள்)” என்ற பாடல் நாளை காலை 10.05 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக காத்திருந்த நிலையில், தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தர்ஷனுக்கு பிணை வழங்கியது விபரீதமானது என உயர்நீதிமன்றத்தை காட்டமாக விமர்சித்த நீதிபதிகள், ஜாமினில் வெளியே இருந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி தர்ஷனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷனை பெங்களூரு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
இதுதொடர்பாக கொலை செய்யப்பட்ட ரசிகர் ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் சிவன்னகவுடர் பேசுகையில், “கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியபோது நாங்கள் கவலைப்பட்டோம், ஆனால் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் காட்டியுள்ளது. நாங்கள் நிம்மதியடைந்தோம், நீதி வெல்ல வேண்டும்” என சிவன்னகவுடர் கூறினார்.
நிம்மதியாக வாழுங்கள் என்ற தனது புதிய படத்தின் பாடல தர்ஷன் வெளியிட இருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக தர்ஷன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.