தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாமகவுக்கு பங்கு- அன்புமணி திடீர் முழக்கம்!

Published On:

| By Mathi

PMK Anbumani Ramadoss

தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் (செயல்) தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) 37-ஆம் ஆண்டு விழாவவை முன்னிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ், ‘வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளதாவது: மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.

தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share