பாமக அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இருவரையும் இணைத்து வைக்க கட்சி நிர்வாகிகளும், குடும்பத்தினரும் முயற்சி செய்த நிலையில், முடிவுறாமல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதாக பாமக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தில் பாமக அலுவலகம் திலக் தெரு, தி.நகர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தைலாபுரம் இல்லத்தில் இன்று (செப்டம்பர் 16) செய்தியாளர்களை சந்தித்த பாமக கெளரவ தலைவர் ஜி கே மணி, “தேர்தல் ஆணையத்தின் கடிதத்தினை காட்டி அரசியலை திசை திருப்பவும் மக்களை நம்ப வைக்கவும் முயல்கின்றனர். அந்த கடித்ததில் திலக் தெரு, தி.நகர் என முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
பாமகவின் நிரந்தரமான முகவரி 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை தான். இதை திலக் தெரு என சூழ்ச்சியினால் கபட நாடகத்தினால் மாற்றியுள்ளனர்.
அன்புமணி ராமதாஸ் 2022ல் பாமகவின் தலைவராக பதவி ஏற்று அவரது பதவி காலம் 28.05.2025 உடன் நிறைவு பெற்றது. அந்த பதவியில் இல்லாதவர் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தினை எப்படி கூட்ட முடியும்? அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது. அது தான் அமைப்பு விதி, மருத்துவர் ராமதாஸ் தான் பொதுக்குழு கூட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமதாஸ் தான் தலைவர்.
எந்த நடவடிக்கையாக இருந்தாலும் நிறுவனர் ஒப்புதலோடு தான் செய்ய வேண்டும், கடிதத்தினை காட்டி திலக் தெருவிற்கு மாற்றியது மோசடி. அதன் மூலம் மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர்.
மருத்துவர் ராமதாஸ் இல்லாமல் எதுவும் இல்லை, ராமதாஸை எந்த வகையிலும் கொச்சை படுத்துவது ஏற்க முடியாது.
பாமகவில் ராமதாஸுடன் அன்புமணி சேர்ந்து நடப்பது தான் நல்லது. எல்லாரும் ஏற்றுகொள்கிற தலைவராக மருத்துவர் ராமதாஸ் உள்ளார். பாமகவில் இருவரையும் நான் தான் பிளவு படுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். மருத்துவர் ராமதாஸ் நான் சொன்னால் கேட்பாரா?
ராமதாஸ் மகள் காந்திமதிக்கு நிர்வாக குழு உறுப்பினர் பதவி தவிர வேறு பதவிகள் வழங்கும் எண்ணமில்லை” என கூறினார்.