பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை 300-க்கும் மேற்பட்ட பாமகவினருடன் ஊர்வலமாக சென்று சந்தித்தார் அக்கட்சியின் இணை பொதுச்செயலாளரான அருள் எம்.எல்.ஏ. PMK Arul
பாமகவில் ராமதாஸ் அணியில் சேலம் அருள் எம்.எல்.ஏ. இருந்து வருகிறார். பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். அண்மையில் பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவியை அருளுக்கு வழங்கினார் ராமதாஸ்.
இதனையடுத்து இன்று சேலதில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பாமகவினரை தைலாபுரம் தோட்டத்துக்கு 30 கார்கள், 4 மினி பேருந்துகளில் அழைத்து வந்தார் அருள். தைலாபுரம் தோட்டத்துக்கு முன்னதாக, திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் இருந்து தமது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாஸை சந்தித்தார் அருள். இதனால் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

ராமதாஸுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அருள் எம்.எல்.ஏ. கூறியதாவது: 45 ஆண்டுகளாக பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ்தான் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பது எல்லாமும் செய்து வருகிறார். பாமகவில் தீரன், ஜிகே மணி, அன்புமணி உள்ளிட்டோர் தலைவர்களாக இருந்த போதும் ராமதாஸ்தான் இந்த நியமனங்களை முடிவெடுத்து அறிவித்து வருகிறார். பாமக நிர்வாகிகள் விவகாரத்தில் ராமதாஸ்-க்கு மட்டுமே முழுமையான அதிகாரம் இருக்கிறது.

பதவிக்காக பெற்ற தந்தையை விட்டு செல்கிறார் அன்புமணி. ஆனால் ராமதாஸின் விசுவாசிகள் என்றைக்கும் அவருடனேயே இருப்பார்கள். அன்புமணியின் இந்த போக்கு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது. தந்தைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்தான் மகன். ஆனால் அன்புமணியோ, அப்பாவுக்கு கட்டுப்பட முடியாது என்கிறார்.
பாமக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை ராமதாஸ் மட்டுமே தீர்மானிப்பார். இன்றைக்கு டாக்டர் அய்யா வாழ்க என குறிப்பிட்டாலே வசைபாடுகிற கூட்டம் ஒன்று உள்ளது; அந்த கூட்டத்தால் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
வாக்காளர்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்; அதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய கூடாது என்று ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு எம்.எல்.ஏ. அருள் கூறினார்.