பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக தற்போது அன்புமணி அணி ராமதாஸ் அணி என இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது.
ராமதாஸ் தரப்புடன் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளார். விரைவில் தந்தையும் மகனும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்தார்..
ஆனால் அன்புமணி தரப்போ, ராமதாசுடன் இருப்பவர்கள் அவருக்கு தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியது.
இந்த சூழலில் ஜிகே மணி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
நேற்று தருமபுரியில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ஜிகே மணி. அதைத்தொடர்ந்து நெஞ்சு பகுதியிலும் முதுகு பகுதியிலும் அசவுகரியமாக உணர்வதாக தன்னுடன் இருந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை அழைத்து வரப்பட்ட ஜிகே மணி வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஜிகே மணியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஜிகே மணி தரப்பிலும் எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஜிகே மணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.