2026 சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனு விநியோகம் என்ற பெயரில் பண மோசடியில் அன்புமணி ஈடுபடுவதாக அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் தரப்பில் காவல்துறை தலைமை இயக்குநர்- டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாமகவின் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பனையூர் பாமக அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனுக்களை அக்கட்சி நிர்வாகிகள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பாமகவின் பெயரை மோசடியாக பயன்படுத்தி விருப்ப மனுக்களை அன்புமணி பெற்று வருகிறார். விருப்ப மனுக்களுடன் கட்டணம் என்ற பெயரில் பண மோசடியிலும் அன்புமணி ஈடுபட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமகவுக்கு ராமதாஸும் அன்புமணியும் உரிமை கோரி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில், பாமகவுக்கு உரிமை கோருவது குறித்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
