தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ந் தேதி தூத்துக்குடியிலும் ஜூலை 27-ந் தேதி கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மாலத்தீவுகளில் அரசு முறைப் பயணத்தை முடித்த பிறகு, பிரதமர் மோடி நேரடியாக தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
தூத்துக்குடியில், ஜூலை 26-ந் தேதி இரவு 8 மணியளவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், ரூ 4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஜூலை 27-ந் தேதி, திருச்சிராப்பள்ளி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் பகல் 12 மணியளவில் ஆடித் திருவாதிரை விழாவுடன் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார்.
ஜூலை 26-ல் மோடியின் தூத்துக்குடி நிகழ்ச்சிகள்
- ரூ 450 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடம் திறப்பு
- விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வழித்தடத்தின் கீழ் ரூ 2,350 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட NH-36 -ன் 50 கி.மீ சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பாதையின் 4-வழிப்பாதை திறப்பு
- 5.16 கி.மீ NH-138 தூத்துக்குடி துறைமுக சாலையின் 6 வழிப்பாதை திறப்பு
- தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ 285 கோடி மதிப்புள்ள, ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு தளவாட நிலையம்–III திறப்பு
- 90 கி.மீ நீளம் உள்ள மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதையின் மின்மயமாக்கல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
- திருவனந்தபுரம்-கன்னியாகுமரி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கி.மீ. நாகர்கோவில் டவுன்-கன்னியாகுமரி பிரிவின் ரூ 650 கோடி இரட்டைப்பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு; ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் சந்திப்பு (12.87 கி.மீ) மற்றும் திருநெல்வேலி-மேலப்பாளையம் (3.6 கி.மீ) பிரிவுகளின் இரட்டை ரயில் பாதை அர்ப்பணிப்பு.
- கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4 (2×1000 மெகாவாட்) -லிருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதற்கான மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல்
ஜூலை 27-ல் கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சிகள்
- முதலாம் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியீடு
- கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஆடித் திருவாதிரை நிகழ்வில் பங்கேற்பு
- கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தின் 1000 ஆண்டுகள் நிறைவு விழா