நாட்டின் 79-வது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15-ந் தேதியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார். அவர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதமாக மாறும் அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நாடு மிகப்பெரிய முன்னேற்றங்களைக்கண்டுவரும் நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் கருப்பொருள் புதிய பாரதம் என்பதாகும். இந்தக் கொண்டாட்டங்கள், வளமான, பாதுகாப்பான மற்றும் துணிச்சலான புதிய இந்தியாவின் தொடர் எழுச்சியை நினைவுகூரும் ஒரு தளமாக செயல்படும், எழுச்சிப் பயணத்தில் மேலும் முன்னேற புதுப்பிக்கப்பட்ட வலிமையை வழங்கும்.
செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வருகை தந்ததும், அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார்.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி கொண்டாடப்படும்.
ஞானப்பாதையில் (ஞான்பத்) உள்ள வியூ கட்டரில் ஆபரேஷன் சிந்தூரின் இலச்சினை இடம்பெற்றிருக்கும். மலர் அலங்காரமும் இந்த நடவடிக்கையின் அடிப்படையில் இருக்கும்.
இந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களைக் காண பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உடையில் இந்த பிரமாண்டமான விழாவைக் காண அழைக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாயத்து பிரதிநிதிகள்
டெல்லி சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 210 பஞ்சாயத்து பிரதிநிதிகள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் செய்துள்ளது. இந்த விழாவில் அவர்களின் இணையர்கள், முக்கிய அலுவலர்கள் என மொத்தம் 425 பேர் பங்கேற்க உள்ளனர்.