பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் கோவையில் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அறிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஆந்திராவின் புட்டபர்த்தியில் சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.
சாய்பாபா நாணயம் வெளியீடு
இந்நிகழ்ச்சியில் சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.
தமிழகம் வருகை
அதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு மோடி வருகை தருகிறார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை கோவையில் மோடி தொடங்கி வைக்கிறார்.
ரூ18,000 கோடி நிதி விடுவிப்பு
இந்நிகழ்ச்சியில், நாட்டில் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை விடுவித்து உரையாற்றுகிறார்.
மாநாட்டின் நோக்கம்
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டிற்கு தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். இம்மாநாடு நவம்பர் 21-ந் தேதி வரை நடைபெறும். சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை துரிதப்படுத்தவதையும் இம்மாநாடு நோக்கமாக
கொண்டுள்ளது.
மாநாட்டின் பயன்கள்
வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஊரக தொழல் முனைவோர்கள் இடையே சந்தை இணைப்புகளை உருவாக்குதல், இயற்கை வேளாண் முறைகள், வேளாண் பதப்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேக்கேஜிங், உள்நாட்டு தொழில்நுட்பங்களில் புதுமை கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் இம்மாநாடு கவனம் செலுத்தும்.
யார் யார் பங்கேற்பு?
இம்மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவோர், விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்கள் விநியோகிப்போர், விற்பனையாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் பங்கேற்பார்கள்.
மோடிக்கு கறுப்பு கொடி
பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவையில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் தி.க, மதிமுக, விசிக, மே 17 இயக்கம் ஆகியவை அறிவித்துள்ளன. பீகாரில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் மோடி பிரசாரம் செய்ததைக் கண்டித்து கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற உள்ளது.
மோடி ட்வீட்
முன்னதாக தமிழகம் வருகை தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் தமிழில், “தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம். நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்” என பதிவிட்டிருந்தார்.
