என்டிஏ கூட்டணியில் தவெக? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,எல். முருகன் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

என்டிஏ கூட்டணியில் நடிகர் விஜய் இணைகிறாரா என்ற கேள்விக்கு, என்டிஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைமைதான் முடிவு செய்யும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸில் ஒரு தரப்பினர் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்த போதிலும், தற்போது சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT
தவெக – பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு:

அதே சமயம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெறும் கட்சிகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மத்திய அமைச்சர்களின் பதில்:

திருச்சியில் இன்று நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த மத்திய அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசுகையில், “கூட்டணிக்கு எல்லாரும் வருகிறார்கள், எல்லாரும் வருகிறார்கள்” என்று பொதுப்படையாகப் பதிலளித்தார். எனினும், “விஜய் கூட்டணிக்கு வருவாரா?” என்று செய்தியாளர்கள் மீண்டும் அழுத்தி கேட்டபோது, அதற்கு நயினார் நாகேந்திரன் முறையாகப் பதிலளிப்பார் என்று கூறிச் சென்றார்.

பியூஷ் கோயல் விளக்கம்:

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், தவெக உடனான கூட்டணி குறித்துப் பேசுகையில், தற்போதுள்ள சூழலில் அதிமுக – பாஜக கூட்டணி வலிமையாக இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்தார். என்டிஏ கூட்டணியில் விஜய் வர வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு குறித்த கேள்விக்கு, என்டிஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக, ஒரு சில பேட்டிகளில் விஜய் ஒரு ‘வாக்குகளைப் பிரிப்பவராக’ (Vote Cutter) இருப்பாரே தவிர, கூட்டணியின் போக்கை மாற்றும் நிலையில் இல்லை என பாஜக தரப்பில் கூறப்பட்டது. இந்த சூழலில் அமைச்சர்களின் இந்த மழுப்பலான மற்றும் சூசகமான பதில்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share