சென்னையில் நாளை முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் வகை நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாய் கடி என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் சில நேரங்களில் பொது வெளியில் அழைத்துச் செல்லப்படும் போது பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் செய்திகள் அவ்வப்போது வெளியாகிறது. மாநில அரசு நாய்களுக்கு கருத்தடை , தடுப்பூசி போடுவது என நாய்கடியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாளை முதல் சென்னையில் புதிதாக ராட்வீலர், பிட்புல் நாய்களை வாங்கி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று (டிசம்பர் 19) மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னையில் பிட் புல், ராட்வீலர் ஆகிய நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்க்கான செல்ல பிராணிகளின் உரிமம் பெற நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் ஏற்கனவே உரிமம் பெற்ற ராட்வீலர், பிட்புல் வகை நாய்களை வெளியில் அழைத்துச் செல்லும் போது கழுத்து பட்டை மற்றும் வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 98,523 செல்லப்பிராணிகள் விபரம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் தற்போது வரை 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறையுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ஏற்படுத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
