பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாரணாசியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடல்களை மாணவர்கள் பாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பிரதமர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடல் பாடப்பட்டதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்க விழாவில் மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்.பாடலை பாடச் செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது. சமூக வெறுப்பும் பிரிவினைவாதக் கொள்கையும் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்வில் இணைப்பது அரசியலமைப்புக் கொள்கைகளை வெளிப்படையாக மீறும் செயல்.
ரயில்வே அதிகாரிகள் இந்த வீடியோவை அதன் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இது தேசிய நிறுவனங்கள் எவ்வாறு சங் பரிவார் அரசியலால் கைப்பற்றப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் பெருமைமிக்க அடையாளமாக இருந்த ரயில்வே, இப்போது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பிரிவினைவாத கொள்கையை ஊடுருவச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆபத்தான போக்கை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
