தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து கோவையில் பொதுமக்கள் மனுக்கள் அளிப்பதற்கு மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதன் காரணமாக, தமிழ்நாடு அரசின் ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவது குறித்த மறுஅறிவிப்பு வரும் வரை இக்கூட்டங்கள் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்க மாற்று ஏற்பாடு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தபால்: பொதுமக்கள் தங்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
புகார் பெட்டி: மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் ‘மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டி’ வைக்கப்பட்டுள்ளது.
நேரில் வரும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை இந்தப் பெட்டியில் போட்டுச் செல்லலாம். இதற்காகப் பிரத்யேகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெட்டி நிறைந்தவுடன் மனுக்கள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டு, உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
