நூற்றாண்டு கடந்த அரசுப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலநடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150 மாணவ, மாணவிகள் தற்போது பயின்று வருகின்றனர்.
சுதந்திரத்திற்கு முன்பே 1920ஆம் ஆண்டு உருவான இந்த பழமைவாய்ந்த பள்ளியை முறையாக பராமரிக்காததால் கட்டிடங்கள் இடிந்து, மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த நான்கு வருடங்களாக மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

மேலும் கட்டிட வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி இல்லாமல் மாணவர்கள் அன்றாடம் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். இந்த அவல நிலையை நமது மின்னலம்பலம்.காம் தளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ‘78வது சுதந்திர தினம் : மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்… நூற்றாண்டு கடந்த அரசு பள்ளியின் அதிர்ச்சியூட்டும் அவலநிலை!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதுதொடர்பாக அப்போது ஆதிதிராவிட நலத்துறை வாரியத் தலைவராக இருந்த மதிவாணனை தொடர்புக்கொண்ட போது, ”பள்ளியின் நிலை குறித்து உடனடியாக விசாரித்து புதிய கட்டிடம் கட்டவும் மற்ற வசதிகள் செய்துதரவும் நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியான குரலில் உத்தரவாதம் அளித்திருந்தார்.
எனினும் அதன்பிறகு உத்தரவாதம் காற்றில் பறக்க, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதால், இன்று வரை மாணவ மாணவிகள் மரத்தடியின் கீழ் பாடம் பயிலும் சூழ்நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அந்த பள்ளியில் நடந்த அசாம்பித சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வழக்கம்போல இன்று காலை 8.30 மணிக்கு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவருந்தி கொண்டிருந்தனர்.
சரியாக 8 :45 மணிக்கு வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது மாணவ மாணவிகள் உண்டுக் கொண்டிருந்தால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து, தங்கள் குழந்தைகளை இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும், மாற்றுச் சான்றிதழை திரும்ப தருமாறும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
அவர்களுடன் மாணவ மாணவிகளும், ”வேண்டும் வேண்டும் புதிய பள்ளிக்கட்டிடம் வேண்டும். போராடுவோம் போராடுவோம் டிசி கொடுக்கும் வரை போராடுவோம்” என கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில், புதுமைபெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நூற்றாண்டு கடந்த அரசு ஆதிதிராவிடர் பள்ளியின் அவல நிலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும் பிஞ்சு குழந்தைகள் படித்து வரும் இந்த பள்ளியில் பெரிய அசாம்பாவிதம் நடக்கும் முன் தமிழக அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.