கோவையில் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவையில் பேரூர் தாலுகா பகுதியில் ரமேஷ் குமார் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் குமார் என்பவர் ஆவண விடுவிப்பு தொடர்பாக விண்ணப்பித்திருந்தார்.
கிடப்பில் போடப்பட்ட ஆவணங்கள்.
இதையடுத்து கீழ்நிலை ஊழியர்கள் ஒப்புதல் அளித்த பின்னரும், இறுதி ஒப்புதல் மட்டும் அளிக்காமல் ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஞ்சித் குமார், தாசில்தார் ரமேஷ் குமாரை அணுகிய போது ஆவண விடுவிப்புக்கு ரூ.50,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜூலை-25ம் தேதி பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள்
இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்பு துறையினரை அணுகினார். அப்போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை தாசில்தாரிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.
அதன்படி ரஞ்சித் குமார், ரமேஷ் குமாரிடம் பணத்தை கொடுக்க முயன்றார். அப்போது ரமேஷ் குமாரின் உதவியாளர் சரவணன் லஞ்ச பணத்தை தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் படி கூறினார். பணம் கொடுக்க முயன்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சட்டென நுழைந்து பணத்தை கைப்பற்றினர்.
தாசில்தார் கைது
இதைத்தொடர்ந்து பேரூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து பணம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் ரசாயனம் தடவிய நோட்டுகள் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் பேரூர் தாசில்தார் ரமேஷ் குமார் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
வரும் 2026ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கோவையில் கடந்த வாரம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று (ஜூலை 25) பேரூர் தாலுகா தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.