அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியது ஏன்? கைதானவர் வாக்குமூலம்!

Published On:

| By Kavi

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர் கைது செய்யப்பட்டார். person who threw mud at Minister Ponmudi was arrested

கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் கரையை கடந்த போது, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அடிப்படை வசதி கூட கிடைக்காமல் தவித்த மக்கள்,  சென்னை – திருச்சி பைபாஸ் சாலையில் டிசம்பர் 3 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கே சென்ற எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாவட்ட அமைச்சர் பொன்முடி வரவேண்டும் என்று மக்கள் கோரினர். இதையடுத்து அமைச்சர் பொன்முடி,  ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். உடன் திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணியும் சென்றார்.

அப்போது அங்கிருந்த மக்கள் அமைச்சரை பார்த்து, “காரை விட்டு இறங்கி ஊரை வந்து பாருங்கள்” என்று சத்தம் போட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் பொன்முடியும், அவரது மகனுமான கவுதம சிகாமணியும், மாவட்ட ஆட்சியரும் காரை விட்டு இறங்கிச் சென்றனர்.

அங்கு வந்திருந்த இளைஞர்கள் அமைச்சர் பொன்முடி, கவுத சிகாமணி ஆகியோர் மீது சேற்றை வாரி இறைத்தனர்.

இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடி வெள்ளை சட்டையில் சேறுடன் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

இதைத் தொடர்ந்து இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன், அவரது சித்தி விஜயராணி ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைறைவாக உள்ள விஜயராணியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு இப்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ராமகிருஷ்ணன் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்தார். இந்த சம்பவம் நடந்த பிறகு காவல்துறை தன்னை கைது செய்துவிடக் கூடாது என்பதற்காக முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், இது காழ்ப்புணர்ச்சியில் செய்யப்பட்டது போல் தெரிகிறது என்று கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

ஒரு வழக்கில் முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டவரை கைது செய்வது காவல்துறையினருக்கு கட்டாயமாகிறது. அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன், தனிப்படை அமைத்து தேடி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு, தனது உறவினரை பார்ப்பதற்காக இருவேல்பட்டுவில் உள்ள வீட்டுக்கு வந்திருக்கிறார் ராமகிருஷ்ணன். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

அவரிடம் அமைச்சர் பொன்முடி மீது ஏன் சேறு வாரி இறைத்தாய் என்று போலீஸார் விசாரித்தனர். ‘இரவும் பகலுமாக எங்கள் கிராமம் வெள்ளத்தில் மிதந்தது. உணவு இல்லை. மாற்று துணி மணி கூட இல்லாமல் தவித்தோம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டோம். அந்த கோவத்தில் தான் மக்கள் மறியல் செய்தார்கள். அப்போதுதான் அமைச்சர், கலெக்டர் எல்லாம் வந்தார்கள்.

எங்கள் ஆதங்கத்தை சொன்னோம்… இறங்கி வந்து எங்கள் வீட்டை பாருங்கள் என்று சொன்னோம்.
எல்லாம் பாத்துட்டோம்… தெரியுதுயா என்று அமைச்சர் அவருக்கே உரிய பாணியில் சொன்னார். அந்த கோபத்தில் ஒரு செடியை பிடுங்கி எறிந்தேன். செடியில் ஒட்டியிருந்த சேறு அமைச்சர் சட்டை மீது சிதறிவிட்டது’ என்று சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீஸார். person who threw mud at Minister Ponmudi was arrested

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share