சேலத்தில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெள்ளி பட்டறைத் தொழிலாளியான சுராஜ் (வயது 37) மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய், தவெக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் வருவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. இதனால் அனைவரும் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெயிலிலேயே நின்றிருந்தனர்.
இந்த நிலையில் 3 மணி நேரம் வெயிலில் நின்றதால் சுராஜ் என்ற வெள்ளிப் பட்டறைத் தொழிலாளி அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சுராஜ் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போதும் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
