தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட நுழைவாயில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படம் அகற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையம் அருகிலுள்ள மண்டேலா நகர் திடலில் நாளை (மார்ச் 1) என்.டி.ஏ கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
காலையில் புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின், மதியம் மதுரை வரும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்வுள்ளனர்.
இந்தசூழலில் பொதுக்கூட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருப்பரங்குன்றம் முருகன், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என பொதுக்கூட்ட முகப்பு பகுதிகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தந்தை பெரியார், அண்ணா ஆகியோரது புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது.
காலையில் பெரியார் படம் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பெரியார் படம் அகற்றப்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அதிமுகவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”மோடியும் அமித்ஷாவும் சொன்னால், கூட்டணிக்காக பெரியார் படத்தை மட்டுமல்ல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தையே எடப்பாடி பழனிசாமி நீக்குவார். பாஜகவின் கிளை கழகமாக அதிமுக மாறிவிட்டதால் அதன் தலைவர்கள் என்ன சொல்வார்களோ, அதைத்தான் எடப்பாடி கேட்பார்” என்று விமர்சித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பேசிய கனிமொழி எம்.பி, “அதிமுக நடத்தக்கூடிய மாநாட்டில் பெரியார் படம் அகற்றப்பட்டிருக்கிறது. முதலாளி என்ன சொல்கிறாரோ அதை செய்யும் தொழிலாளி போல் அதிமுக உள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார்.
