மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் பிரதான சாலையில் நடமாடிய பாகுபலி யானையை பொதுமக்கள் வனத்திற்குள் விரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது தென்படுகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை,லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த யானை கடந்த சில மாதங்களாக பொதுமக்களின் கண்களில் அகப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென்படுகிறது.
பொதுவாக உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரத்தில் வனத்தையொட்டி உள்ள விளை நிலங்களுக்குள் வரும் பாகுபலி யானை பகல் நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிடும்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் பிரதான சாலையில் முந்திரி முடக்கு பகுதியில் காட்டு யானை பாகுபலி உலா வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அழகிடா.. போப்பா.. போ.. போ என கொஞ்சி கொஞ்சி விரட்டினர். அப்போது பாகுபலி யானையும் சாதுவாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த காட்சியை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.