கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை நேற்று (டிசம்பர் 14) ஒரே நாளில் 27,452 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
கோவையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் கலைஞர், செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆட்சிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த திட்டம் செய்படுத்தப்படாமல் இருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவை காந்திபுரம் சிறை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 208.50 கோடி செலவில் முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
உலக தரத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்தப் பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்தத் தோட்டம், நீர் தோட்டம் நட்சத்திரத் தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் செம்மொழி வனத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் நடப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக பூங்கா வளாகத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய மதி அங்காடி நிறுவப்பட்டுள்ளது.
மேலும் உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கான பிரத்யேக விளையாட்டு திடல் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பூங்கா கடந்த 11ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் செம்மொழி பூங்காவை பார்வையிட பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதல் நாளான 11ஆம் தேதி 3,600 பேர் பூங்காவை பார்வையிட்டனர். 12ஆம் தேதி 6,202 பேரும், 13ஆம் தேதி 16,037 பேரும் பூங்காவை பார்வையிட்டனர்.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் செம்மொழிப் பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் 27,452 பேர் பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் காரணமாக செம்மொழிப் பூங்கா அமைந்துள்ள காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் நிலையில் விடுமுறை நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் பூங்காவின் பார்வை நேரத்தை எட்டு அல்லது ஒன்பது மணி வரை நீட்டிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.
