பாஜகவின் கூட்டணிக்காக தவம் இருப்பதாக அதிமுகவினரை மறைமுகமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். BJP alliance Annamalai pressmeet
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்குமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் அதிகரித்துள்ளது.
பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் அதேவேளையில், அதிமுக எங்களுக்கு எதிரி இல்லை என்று அண்ணாமலை கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில் கோவையில் இன்று (மார்ச் 7) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை,
“பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் தோற்றோம் என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் இன்று பாஜக வேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
இன்று பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். மற்றபடி நான் எந்தக் கட்சியையும் எந்த தலைவரையும் சிறுமைப்படுத்தி பேசவில்லை.
எந்த கட்சியுடன் கூட்டணி, யார் தலைவர், யார் முதல்வர் என்பதை எல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.
நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல, எங்களுடைய நோக்கம் பாஜகவை நிலைநிறுத்த வேண்டும்.
பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று பலமாக இருக்கிறது. இந்த கூட்டணியில் டிடிவி தினகரன் உட்பட பல தலைவர்கள் பயணம் செய்கின்றனர். அவர்களையெல்லாம் பாதியில் பாஜக இறக்கிவிடாது ” என்று கூறியுள்ளார். BJP alliance Annamalai pressmeet