மொபைல் போனில் கைரேகை, முகத்தை அடையாளமாக பயன்படுத்தி யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று (அக்டோபர் 8) முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக பொருட்கள் வாங்குவதற்கும், சேவைகளை பெறுவதற்கும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) எனப்படும் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பயனார்களுக்கு பணம் செலுத்துவதை இன்னும் எளிமையாக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது.
தற்போது யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது பின் நம்பர்களை அடையாளமாகக் கொண்டு பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அதில் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக பின் நம்பர்கள் பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.
இந்த நிலையில் இந்திய அரசின் தனித்துவமான அடையாள அமைப்பான ஆதாரின் கீழ் சேமிக்கப்படும் பயோமெட்ரிக் தரவுகளான கைரேகை அல்லது முக அங்கீகாரம் பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது.
ஏற்கெனவே மொபைலை ஆன் செய்வதற்கும், ஆப்களில் நுழைவதற்கும் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது பணப்பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பின் நம்பருக்கு மாற்றாக, கைரேகை, முக அங்கீகாரம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது நிதி மோசடிகள் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என NPCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.