தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த பவன் கல்யாண் இப்போது ஆந்திராவின் துணை முதலமைச்சர். அவரது நடிப்பில் ‘வக்கீல் சாப்’, ’பீம்லா நாயக்’ படங்கள் இதற்கு முன் வெளியாகியிருந்தன. பிறகு, அவர் கடவுளாக நடித்த ‘ப்ரோ’ வந்தது. இதோ இப்போது ‘ஹரிஹர வீர மல்லு’ வெளியாகியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமையன்று தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தியிலும் இப்படம் வெளியானது. ஆனால், வசூல்தான் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. முதல் நாள் வசூல் 34.75 கோடி என்றும், அதற்கு முந்தைய ப்ரிவியூ ஷோ வசூல் 12.75 கோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் உத்தேசமாக 8 மற்றும் 9.5 கோடி வசூலித்ததாகச் சொல்லப்படுகிறது.
என்னதான் கோடிகளில் கணக்கு சொன்னாலும், இப்படத்தின் டிக்கெட் விற்பனை குறைவாக இருப்பது ‘புக் மை ஷோ’ ட்ரெண்டிங்கில் தெரிய வந்திருக்கிறது.
சனிக்கிழமையன்று மட்டும் இப்படத்திற்காக 1 லட்சத்து 4 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருப்பதாகச் சொல்கிறது அந்நிறுவனத்தின் கணக்கு. அதேநேரத்தில், அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ சுமார் 2 லட்சத்து 9 ஆயிரம் டிக்கெட்டுகளையும் ‘தலைவன் தலைவி’ சுமார் 1 லட்சத்து 94 ஆயிரம் டிக்கெட்டுகளையும் அள்ளியிருக்கின்றன.
விற்பனையில் இருக்கும் வித்தியாசமானது ‘ஹரிஹர வீர மல்லு’ எந்தளவுக்குப் பின்தங்கியிருக்கிறது என்பதை காட்டுகிறது. இதனைக் காணும் அவரது ரசிகர்கள் மனதில், இதே பாணியில் அவரது அடுத்தடுத்த படங்களும் அமைந்துவிடக் கூடாது என்பதே வேண்டுதலாக இருக்கும்.
நாயகனாக பவன் கல்யாண் பின்தங்குவது பெரும் பிரச்சனையல்ல. ஒரு அரசியல் தலைவராக அப்படி ஏதும் நேர்ந்திடக் கூடாது என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கும்..!