ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: அடிமேல் அடிவாங்கும் பாஜக- அதிமுக கூட்டணி! தலைதெறிக்க தப்பி ஓடும் கட்சிகள்- பேரதிர்ச்சியில் டெல்லி!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “கட்ட வண்டி கட்ட வண்டி..

கடையாணி கழண்ட வண்டி..

ADVERTISEMENT

ஆளாய் பறந்த வண்டி..

ஆடி ஆடி அலுத்த வண்டி” என்கிற பாடல் வரிகள் எவ்வளவு பொருத்தம்யா என சிலாகித்துக் கொண்டே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

ADVERTISEMENT

என்னய்யா.. எந்த கட்டை வண்டிக்கு எல்லாம் கழண்டு போச்சாம்?

அதுவா.. நம்ம பாஜக தலைமையிலான கூட்டணி வண்டியில்தான்பா..

ADVERTISEMENT

என்னதான் நடக்குது பாஜக கூட்டணியில்?

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா, ஜான் பாண்டியனின் தமமுக, புரட்சி பாரதம் கட்சி இருந்தாங்க..

ஆமா..

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை. பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, ஜான் பாண்டியனின் தமமுக தான் பாஜகவுடன் கை கோர்த்து இருந்தாங்க…

2024-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், எஸ்டிபிஐ இருந்துச்சு..

சரிய்யா.. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு?

அதைத்தான் சொல்றேன்யா..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் கை கோர்த்துருச்சு.. ஆனால் பாஜகவின் பங்காளிகளாக இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக விட்டால் போதும்னு ஜூட் விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கிறதே..

எந்தெந்த கட்சி.. எங்க அல்லாடுதுன்னு விளக்கமாவே சொல்லிடும்யா..

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரலைங்கிற கோபத்துல பாஜக கூட்டணியை விட்டு போறேன்னு ஓபிஎஸ் ஏற்கனவே அறிவிச்சுட்டாரு..

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாதுன்னு சொல்லிவிட்டே கூட்டணியை விட்டு போயிட்டாரு டிடிவி தினகரன்,

இப்ப இந்த ரெண்டு பேரையும் பாஜக கூட்டணிக்குள் இழுக்கிறதுக்கு ஒரு பக்கம் நயினார் நாகேந்திரன்.. இன்னொரு பக்கம் அண்ணாமலையும் முட்டி மோதிகிட்டு இருக்காங்க..

ஓஹோ.. பாமக என்ன நிலையில் இருக்குதாம்?

பாமக, இப்ப இரண்டு கட்சியாக பிளவுபட்டு இருக்கு.. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிகிட்ட அன்புமணி பேசினாரு.. பாமகவே நம்ம கிட்டதான் இருக்கு.. இதை வெச்சு அதிமுககிட்ட சீட் அதிகமாக வாங்கிவிடலாம் என கணக்குப் போட்ட அன்புமணிக்கு, “அப்பாவும் (ராமதாஸும்) நீங்க ஒன்னா ஒரே கட்சியாக இருந்தால்தான் கூட்டணிக்கு பலமா இருக்கும்.. அதனால ஒரே கட்சியாக வாங்க பேசிக்கலாம்” என்று பதில் சொல்லிவிட்டாராம் எடப்பாடி.

இந்த பேச்சுவார்த்தை பற்றி சக நிர்வாகிகளிடம் பேசிய அன்புமணி, “ஓபிஎஸ், டிடிவி இல்லாமல் தென் தமிழகத்தில் அதிமுக பலவீனமாக இருக்கு.. வடக்கே நம்முடன் கூட கூட்டணி வெச்சுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு இருக்கு.. நாம இல்லைன்னா அதிமுகவுக்கு கொங்கு பெல்ட் ஓட்டுமட்டும்தான் கிடைக்கும்.. அப்படி இருந்தும் கூட, எடப்பாடி பழனிசாமி கூட நம்மை கூட்டணியில சேர்க்க அப்பாவை கூட்டிட்டு வாங்கன்னு சொல்றாங்க.. அப்பாவோ நம்மை கட்சியை விட்டே நீக்குறாரு.. ” என ரொம்பவே வருத்தப்பட்டாராம்..

ராமதாஸும் அதிமுக கூட்டணியைத்தான் விரும்பினாரு.. பாஜகவுக்கும் கிரீன் சிக்னல் கொடுத்துகிட்டு இருக்காரு.. என்ன இருந்தாலும் ‘உள்வீட்டு’ அக்கப் போர் முடியாம ‘தெருவுல ஊர்வலம்’ போக முடியாத நிலைமையில் பாமக இருக்குது…

ஜிகே வாசனின் தமாக அங்கதான் இருக்கும்.. ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ண்சாமி என்ன ‘மோடில்’ இருக்காங்களாம்..

டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜகவின் அதிதீவிர கரசேவகராகவே மாறிப் போனார்.. பாஜக தலைவர்களை விட பக்கா ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியாகவே மாறி பேசினார் டாக்டர். ஆனாலும், பாஜக தமக்கு சரியான முக்கியத்துவம் தரலைன்னு ரொம்ப வருத்தமாம் டாக்டருக்கு.. தமது கட்சியினரிடம் பேசும் போது, “ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு எல்லாம் போய் விசுவாசத்தை காட்டினோம்.. நெருக்கமாக இருக்கிறோம்னு சொன்னோம்.. ஆனா எந்த ஒரு மரியாதையும் நமக்கு கிடைக்கலை.. இதுதான் நமக்கு மிச்சம்” என ஆதங்கப்பட்டாராம் டாக்டர்.

பாஜக- அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பாததால, தவெக தலைவர் நடிகர் விஜய்யுடன் பேசியிருக்கிறார் டாக்டர். தவெகவும் டாக்டரின் புதிய தமிழகம் கட்சியை தங்களோட பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள ரெடியாகவே இருக்குதாம்..

தேமுதிகவோட பொசிசன் என்னவாம்?

அதிமுகதான் இயல்பான கூட்டணின்னு சொன்ன தேமுதிக, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் ரொம்பவே அப்செட் ஆகிடுச்சு.. ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுக தந்துரும்னு நம்பிக்கையா இருந்த பிரேமலதாவுக்கு ரொம்பவே ஏமாற்றம், அதிர்ச்சிதான் கிடைச்சது..

பிரேமலதாவுடன் பேச பாஜக தரப்பில் ரொம்பவே முயற்சிக்கிறாங்க.. பிரேமலதாவோ, எந்த ஒரு பிடியும் கொடுக்காமலேயே இருக்கிறாரு.. ஏற்கனவே திமுக தரப்பில் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாரு.. திமுக கூட்டணிக்கு போகலாம்னுதான் பிரேமலதா நினைக்கிறாங்களாம்யா..

ஓ.. அப்ப பாஜக கூட்டணியிலேயே இருக்க போறாரா ஜான் பாண்டியன்?

அதான் ட்விஸ்ட்டே.. 2021-ல் இருந்து பாஜக கூட்டணியில் இருக்கிறாரு ஜான் பாண்டியன்.. ஆனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ்னு முக்குலத்தோர் சமூக தலைவர்களுக்கு தரக் கூடிய மரியாதையை தனக்கு பாஜக தலைவர்கள் தருவதில்லைன்னு ரொம்பவே ஆதங்கப்படுகிறாராம்.. இதனால பாஜக- அதிமுக கூட்டணி ‘ஏரியா’வில் இருந்து விலகித்தான் இருக்கிறார் ஜான் பாண்டியன்.

பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தாலும், ‘நாட் ரீச்சபிளில்’தான் ஜான் பாண்டியன் இருக்கிறாராம்..

தவெக கூட்டணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி போறதால அங்கேயும் போகமாட்டாரே ஜான் பாண்டியன்?

அதென்னவோ உண்மைதான்..

இப்ப திமுக தரப்பும் ஜான் பாண்டியன் தரப்பும் பேசிகிட்டு இருக்காங்க.. இந்த பேச்சுவார்த்தை முடியும் போதுதான் எல்லாமும் ‘வெளிச்சத்துக்கு’ வரும்… அப்பதான் ஜான் பாண்டியன் என்ன செய்வாரு? தனித்து போட்டியிடுவாரா? திமுக கூட்டணியில் ஒரு அங்கம்னு ஐக்கியமாவாரான்னு தெரியும்..

பாஜக – அதிமுகவைத் தவிர வேற எந்த கட்சியும் கண்ணுக்கெட்டிய தூரத்துல கூட்டணிக்கு வரலை; ஏற்கனவே இருக்கிற கட்சிகளும் கண்னுக்கு தெரியாத தொலைவுக்கு நாட் ரீச்சபிள்னு வெளியே தப்பி ஓடிகிட்டே இருக்காங்க.. இதை எல்லாம் டெல்லி மேலிடம் துளியும் ரசிக்காமல் ‘செம்ம’ கடுப்பில் காரண காரியங்கள் என்ன? யார் இதற்கு காரணம்? என்றெல்லாம் துருவி துருவி ஆராயுது என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share