ADVERTISEMENT

பொங்கல் சமயத்தில் சோகம் : பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்பு!

Published On:

| By Kavi

பகுதி நேர ஆசிரியரான பெரம்பலூரைச் சேர்ந்த கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருப்பது அரசு ஊழியர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ஆறாவது நாளான நேற்றைய போராட்டத்தின் போது, ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அங்கு, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி பகுதி நேர ஆசிரியர் கண்ணன் (50)  வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தொடர் மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி 14) பெரம்பலூர் கண்ணன் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

தங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆசிரியர் உயிரிழந்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பகுதி நேர ஆசிரியர் பெரம்பலூர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம்” என்று சக ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. உயிரிழந்த ஆசிரியர் கண்ணனின் உடலை பெறப்போவதில்லை எனவும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் பகுதிநேர ஆசிரியர் சங்க தலைவர் முருகதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

இந்தசூழலில் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாமக தலைவர் அன்புமணி

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்

பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

எத்தனை கடினமான சூழலில் வாழ்க்கை இருந்திருந்தால், தற்கொலை என்ற மிக மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்கு, ஆசிரியர் திரு. கண்ணன் தள்ளப்பட்டிருப்பார் என்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லை. பணி நிரந்தரம் கோரிப் போராடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில், வெறும் ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருக்கிறது திமுக அரசு. பகுதி நேர ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை பணி நிரந்தரம் மட்டுமே. ஆனால், அதைக் குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டு காலம் காத்திருந்த ஆசிரியப் பெருமக்களுக்கு, திமுக செய்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும், வாழ்க்கையும் எப்படிப் புரியும்?

த.வெ.க கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் 

முதல்வர் ஸ்டாலின் அவர்களே,

ஆட்சிக்கு வரும் அவசரத்தில், தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 181-ல் என்ன சொன்னீர்கள்? “பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்று சத்தியம் செய்தீர்களே! நம்பி வாக்களித்தார்கள்… நான்கு ஆண்டுகள் பொறுத்திருந்தார்கள்… இறுதியில் ரோட்டில் இறங்கிப் போராடினார்கள். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? பணி நிரந்தர ஆணையைத் தருவதற்குப் பதிலாக, அவர்களைக் குற்றவாளிகளைப் போல மண்டபத்தில் அடைத்து வைத்தீர்கள்! வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்தவர்கள், நம்பி வந்த ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டதுதான் உங்கள் சமூக நீதியா? நினைவில் கொள்ளுங்கள்… நீங்கள் விதைத்த “நிறைவேற்றாத வாக்குறுதிகள்” ஒவ்வொன்றும், உங்கள் ஆட்சியின் வேரை அழித்துக் கொண்டிருக்கின்றன. இன்று முதல்… ‘181’ என்பது வெறும் வாக்குறுதி எண் மட்டுமல்ல… உங்களை ஆட்சியை விட்டு அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்டிருக்கும் “கணக்கில்” சேர்ந்திருக்கும் மிக முக்கியமான எண்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share