புவியியல் அமைப்புகளும் மக்கள் தொகையியலும் கூட்டாட்சி அமைப்புகளின் கச்சிதமான சதுரங்களுக்குள் எல்லாச் சமயங்களிலும் அடங்கிவிடுவதில்லை. அதனால்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பைச் சுற்றியுள்ள விவாதங்களின் மையப்புள்ளியாக ‘பிரதிநிதித்துவம்‘, ‘விகிதாச்சாரம்‘ ஆகிய சிக்கல்கள் இருக்கின்றன.
அரசியல் பிரதிநிதித்துவம் என்பது எந்த அளவிற்கு, எவ்வளவு காலம் மக்கள்தொகை விகிதத்துடன் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்? நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சிறுபான்மை மக்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றும் ‘குறைந்துவரும் விகிதாச்சார‘ (Degressive Proportionality – DP) கொள்கையிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். அங்கு 8.36 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனி முதல், தலா 5 லட்சம் மக்கள் மட்டுமே கொண்ட லக்சம்பர்க், மால்டா ஆகிய நாடுகள்வரை மக்கள்தொகையில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 14(2) பிரிவின்படி, பெரிய நாடுகள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் (MEPs) தேர்ந்தெடுக்கும். ஆனால் சிறிய நாடுகள் அவற்றின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது பெரிய நாடுகளைவிடக் கூடுதல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும். இது முழுமையான விகிதாச்சாரம், சமமான வாக்குரிமை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுத்தரமான தீர்வாகும்.

இந்தியச் சூழலில், இது ரவி கே. மிஸ்ராவின் பரிந்துரையை ஒத்துள்ளது: மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதே சமயம் லட்சத்தீவு, லடாக் போன்ற மிகச்சிறிய பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களும் தங்களது தற்போதைய இடங்களை இழக்காமல், தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும். இது ‘ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு‘ என்ற கொள்கைக்கு மிக நெருக்கமானதாக இருக்கும். எல்லா மாநிலங்களிலும் உள்ள தொகுதிகளின் சராசரி மக்கள்தொகை அளவையும் இது குறைத்துவிடும்.
இந்த அடிப்படையில் பார்த்தால், 2011 கணக்கெடுப்பின்படி, கேரளம், இமாச்சலப் பிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் கூடுதல் இடங்களைப் பெறும். உத்திரப் பிரதேசம் (31), பிகார் (22), ராஜஸ்தான் (19) ஆகிய மாநிலங்கள் பெரும் அதிகரிப்பைக் காணும். இது உத்திரப் பிரதேசத்தின் அரசியல் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும்.
மக்களவையை மட்டும் விரிவுபடுத்துதல்

தெற்கு மாநிலங்களின் பாதிப்பு உணர்வைத் தணிக்க மற்றொரு வழி, இந்தியாவின் 100ஆவது சுதந்திர ஆண்டான 2047வரை மாநிலங்களவை இடங்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் இருப்பதாகும். இதன் மூலம், மக்களவை வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசியல் வலிமையைப் பிரதிபலித்தாலும், மாநிலங்களவை மாநிலங்களின் நலன்களைப் பேசுவதற்கான இடமாக இருக்கும். பண மசோதாக்களில் மாநிலங்களவையின் அதிகாரம் குறைவு என்றாலும், அரசியலமைப்புத் திருத்தங்கள், புதிய அகில இந்தியப் பணிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் மாநிலங்களவையின் குரல் மிக முக்கியமானது. அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மேலவையில் சமமான பிரதிநிதித்துவம் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
பெரிய மாநிலங்களை மறுசீரமைத்தல்

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிந்தைய தொகுப்பு மறுவரையறையில், சிக்கிம், மிசோரம் போன்ற சிறிய மாநிலங்களுக்கும் உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகப் பெரியதாக இருக்கும். பெரிய மாநிலங்களை மறுசீரமைப்பது இதற்குத் தீர்வாக அமையக்கூடும். விதர்பா, பூர்வாஞ்சல், மிதிலா, உத்தர ஆந்திரா, புந்தேல்கண்ட், மார்வார் போன்ற புதிய மாநிலக் கோரிக்கையாளர்களுக்குக் குரல் கொடுக்கலாம்; அத்துடன் மொழியியல் கவுன்சில்களுக்கும் தாய்மொழிக் கல்விக்கும் அரசு ஆதரவு அளிக்க வேண்டும். 2011இல் உத்தரப் பிரதேசச் சட்டமன்றம் அந்த மாநிலத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது இங்கே குறிப்பிடத்தக்கது.
புதிய மாநில மறுசீரமைப்பு
கௌதம் தேசிராஜு போன்ற ஆய்வாளர்கள் இன்னும் தீவிரமானதொரு யோசனையை முன்வைக்கின்றனர்: நாட்டை மக்கள் தொகை அடிப்படையில் சமமான 75 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இந்த மாநிலங்களில் மக்களிடையே கலாச்சார, மொழியியல், பொருளாதார அபிலாஷைகள் ஒத்திசைவுடன் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இது பிரிட்டிஷ் காலத்தில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட மாகாணப் பிரிவுகளைக் காட்டிலும் இந்தியாவின் அரசியல் அணுகுமுறைக்கு ஏற்றது என்று அவர் வாதிடுகிறார். மகாபாரத காலத்தில்கூட இந்தியா தன்னாட்சி பெற்ற பல அரசுகளாக இருந்ததை இதற்குச் சான்றாக அவர் கூறுகிறார்.

இப்படிச் சொல்பவர் இவர் மட்டுமல்ல. அரசியல் ஆய்வாளர் ரஷீதுதீன் கான், இந்தியாவின் கலாச்சார மற்றும் தட்பவெப்ப மண்டலங்களுக்கு ஏற்ப 56 அலகுகளைக் கொண்ட கூட்டாட்சி இந்தியாவை 70களில் பரிந்துரைத்தார்.
அதிகாரச் சமநிலை

கடந்த ஏழு தசாப்தங்களில், அதிகாரம் மாநிலங்களிடமிருந்து மத்திய அரசை நோக்கி நகர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட் (ரூ. 56 லட்சம் கோடி), அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மொத்த பட்ஜெட்டை (சுமார் ரூ. 50 லட்சம் கோடி) விட அதிகமாக இருப்பதே இதற்குச் சான்று. ஜிஎஸ்டி அறிமுகத்திற்குப் பிறகு, மாநிலங்களின் கவனம் சேவை வழங்கல், விரைவான அமலாக்கம் ஆகியவற்றின்மீது திரும்பியுள்ளது. அரசியல், பொருளாதார ரீதியாக மாநிலங்கள் செல்வாக்கை இழந்திருந்தாலும், குடிமக்கள் சேவைகளைப் பொறுத்தவரை மாநிலங்களின் பங்கு இன்னும் நேரடியாகவும் அவசியமானதாகவும் உள்ளது. இந்தச் சூழலில், சிறிய மாநிலங்களே சிறந்த நிர்வாகத்திற்கு வழிவகுக்கும்.
சாதக பாதகங்கள்
இத்தகைய தீர்வுகள் அனைத்திலும் சவால்கள் உள்ளன. தொகுதி மறுவரையறை ஆணையம் அறிவிக்கப்பட்டவுடன், புதிய மாநிலங்கள் உருவாக்கம், மாநில எல்லைகள் ஆகியவை தொடர்பான கோரிக்கைகள் தீவிரமடையும்.
அறிஞர்களின் குரல்கள் நுட்பமான விஷயங்களை உள்ளடக்கியவையாக இருந்தாலும், அரசியல் களத்தில் இது கடும் மோதலாகவே இருக்கும். தெலுங்கு தேசம் கட்சியும் திராவிடக் கட்சிகளும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று வாதிடும்; ஆனால் உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்த சமாஜ்வாதி, ஆர்ஜேடி கட்சிகள் கூடுதல் பிரதிநிதித்துவத்தை விரும்பும். திருணமுல் காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் தங்கள் மாநிலங்கள் பிரிக்கப்படுவதை எதிர்க்கும். மத்தியிலும் மாநிலத்திலும் கால் பதிக்கத் துடிக்கும் பாஜக, தனது அனைத்துப் பிரிவுகளின் நலன்களையும் சமநிலைப்படுத்தப் பெரும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்தத் தேன்கூடு கலைக்கப்பட்டால், அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.
சஞ்சீவ் சோப்ரா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி; ‘வேலி ஆஃப் வேர்ட்ஸ்‘ (Valley of Words) இலக்கிய விழாவின் இயக்குநர். சமீப காலம்வரை லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கழகத்தின் (LBSNAA) இயக்குநராகப் பணியாற்றினார்.
